ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில், கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை எரிக்க மயானங்களில் இடம் கிடைக்காததால், இறந்தவர்களின் உடல்களை, அவர்களின் உறவினர்கள் கங்கை ஆற்றில் விட்டுவிடுவதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கங்கையில் வீசப்படும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் : உ.பி மயானங்களில் இடமில்லாததால் நேரும் அவலம்
கடந்த இரண்டு நாட்களாக, பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் கங்கை ஆற்றங்கரையில் ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்ட சிதைந்து போன சடலங்கள், முறையாக தகனம் செய்யப்பட்ட நிலையில், அதே மாவட்டத்தின் பிரம்மபூர் நகரின் கரையில் மேலும் பல சடலங்கள் ஒதுங்கியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சடலங்கள் அனைத்தும், அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்தவை என்று கூறி, அச்சடலங்களுக்கு பொறுப்பேற்க, அம்மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (மே 12), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிந்துள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன், “ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2021
மேலும், “ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன” என்று ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு, கங்கை நதியை சுத்தப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி `நவாமி கங்கா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.28 ஆயிரம் கோடி செலவில், 310 திட்டங்களை ஒருங்கிணைத்து வகுக்கப்பட்ட இத்திட்டத்தில், கங்கை ஆற்றையும், அதன் கரையையும் சுத்தப்படுத்தி மேம்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.