Aran Sei

வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தவர் தொ.ப – கமல்ஹாசன்

சித்தாந்தத்தை விட வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தவர் தொ.பரமசிவன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ‘அறியப்படாத தமிழகம்’, ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை.

அவரது மறைவுக்கு இன்று கமல் ஹாசன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “தொ.ப என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். அதுவும்தான் அவர். பெரியாரின் பகுத்தறிவு கருத்தியல் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார். அதுவும்தான் அவர். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற்பட்ட அறிஞராக இருந்தார். அதுவும்தான் அவர். சித்தாந்தத்தை விட வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தார். அதுவும்தான் அவர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி

“மேற்கண்டவை அவர் விரும்பி அணிந்த முகமூடிகள் அல்ல. அவரது அடையாளங்கள். சரிநிலைகளுக்கேற்ப சமரசம் செய்து கொண்டவர் அல்ல. சமநிலையே அவரது நோக்கும் போக்குமாக இருந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“நான் வைணவ குடும்பத்தில் பிறந்தவன். பக்தி இலக்கியங்கள் ஊட்டி வளர்க்கப்பட்டவன். ஆனால், தொ.ப-வை இந்த விஷயத்தில் என்னால் வெல்ல முடிந்ததே இல்லை” எனக் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“எனக்குக் கற்பிக்கப்பட்ட வைணவத்தைவிட தொ.ப வழியாக நான் புரிந்துகொண்ட வைணவம் மிகப் பெரிது. அதன் தத்துவார்த்தமான உள்ளடுக்குகளின் மீது புது வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்தான்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், தனது நம்பிக்கையையும் ஆய்வையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாத அந்தச் சமநிலையே அவர் மீது எனக்குப் பிரேமையை உருவாக்கியது. ‘சென்ட்ரிஸம்’ என்பதும் மய்யம் என்பதும் நடுவுநிலைமை என்பதும் இதுதானே?” என்று அவர் கூறியுள்ளார்.

தொ.பரமசிவன் மரணம்: வேர்களை நோக்கி பயணித்த ஆலமரம் வீழ்ந்தது – உமேஷ் சுப்ரமணி

“தொ.ப-வுக்கு சில விஷயங்கள் காதில் கேட்காது. அதில் சினிமா ஒன்று. வெறும் கேளிக்கை கூத்து என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த மனத்தடையைத் தாண்டி என்னை ரசித்தார். சினிமாக்காரன் பின்னாடி அலைந்தேன் எனும் பெயர் தனக்குக் கிடைக்கலாகாது என்பதில் உறுதியாக இருந்தார். கற்றுக்கொள்வதில் நான் காட்டிய ஆர்வத்தினால் ஒரு சீடனாக என்னை ஏற்றுக்கொண்டார். என் சிறு அவையில் அவரொரு அபிராமப்பட்டராகவும் திகழ்ந்தார்” என்று இரங்களில் கூறப்பட்டுள்ளது.

“என் மகள் ஸ்ருதி தமிழ் மொழியைச் சரியாகக் கற்றுக்கொள்ளவில்லை. இந்திதான் அவளது தாயின் மொழி. நானும் மொழித்திணிப்பை ஆதரிப்பவன் இல்லை என்பதால் தமிழ் கற்றுக்கொள் என வற்புறுத்தவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாள் அவளே தமிழ் கற்க முடிவெடுத்து, ‘நீங்கள் பள்ளிக்குச் செல்லாமலே தமிழ் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் ஆசிரியர்?’ என்று கேட்டாள். ஒன்றா இரண்டா ஆசிரியர்கள் என் வாழ்வில்? இம்மொழியில் எழுதும் எத்தனையோ மகத்தான எழுத்தாளர்கள் என் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அருகமர்ந்த ஆசிரியன் என்பதால் ‘தொ.ப’ என்றேன். ‘ஒஹ்… ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட் பிடிப்பாரே… அந்த அங்கிளா’ என்றாள் ஸ்ருதி” என்று கூறி அந்த சம்பவங்களை கமல் நினைவு கூர்ந்துள்ளார்.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார் – அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

“எனது அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க எவருக்கும் அனுமதி கிடையாது. ஒரேயொரு விதி விலக்கு தொ.ப மட்டுமே. அவர் சிகரெட் பிடிப்பதை ஸ்ருதி அவ்வப்போது மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறாள். ஒரு சிகரெட் முடிந்த மறுகணமே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்து பேச்சைத் தொடங்குவார் அவர். அவளைப் பொருத்தவரை தொ.ப என்றால் ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட் குடிக்கும் ஒரு மனிதர். இதுதான் அடுத்த தலைமுறையின் புரிதல். அதை மாற்ற வேண்டும். என் பெண்ணுக்கு மட்டுமல்ல தமிழகத்தின் இளைஞர் குழாமுக்குத் தொ.பரமசிவனை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பண்பாட்டுக்கு, நம் வரலாற்றுக்கு, ஆய்வுத்துறைக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதை தெரிய வைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எல்லாருமே மனிதர்கள்தான். மனம்தான் அவர்களைப் பட்டியலிடுகிறது. மனு அதை வேறொரு பட்டியலில் வைக்கிறது. மனுவுக்கு வேலை இல்லை. அந்த உலகத்தை விட்டு வெகுதூரம் முன்னேறி வந்து விட்டோம். இது ஒரு பெரிய புரட்சி. இந்தப் புரட்சியைச் சாத்தியமாக்கியவர்களில் தொ.பவும் ஒருவர்” என்று அதில் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“அவரை தெய்வம் என்று நான் கொண்டாட மாட்டேன். ஆனால், அவரை கொண்டாடியே ஆக வேண்டும். அவர் இருந்திருந்தால் இந்தக் கொண்டாட்டத்தை மறுத்திருப்பார். வெறுத்திருப்பார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்குலாபின் அறமும் அரசியலும் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

“என்னைப் போலவே அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கலாம். அவரை நாம் ஒரு தொன்மமாக ஆக்கிவிடக் கூடாது. அவரை மனிதனாக உயிர்ப்போடு அணுகுவதன் வழியாகத்தான் இன்னொரு தொ.பரமசிவன் உருவாகும் சூழலை உருவாக்க முடியும்” என்று அதில் கமல் குறிப்பிட்டுள்ளார்.

“கலைஞர்களை, சிந்தனையாளர்களை, அறிஞர்களை, படைப்பாளிகளை, இசைவாணர்களை இருக்கும்போதே கொண்டாடுங்கள். சாகும்போதுதான் புகழ் என்பது பெருமையல்ல. உரிய காலத்தில் கொண்டாடப்பட்டிருந்தால் அவர் இன்னமும் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதிகம் எழுதியிருப்பார் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. பாரதரத்னா என்பது பதினெட்டு வயதானவனுக்கும் வழங்கப்படலாம். பெறுபவன் சிறுவனா கிழவனா என்பதல்ல, பங்களிப்பே பிரதானம்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

“இந்த இரவின் மீது துயரின் வர்ணம் பூசப்படுகிறது. இதை எழுதும் தருணம் மகளோடு அமர்ந்திருக்கிறேன். மகள்களின் முன் கண்ணீர் சிந்தும் வழக்கம் எனக்கு இல்லை. அவளுக்கு முதுகைக்காட்டி வெள்ளைத்தாளில் கண்ணீர் துளிகள் தெறிக்க விரல் நடுங்க இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சமநிலையும் சமயங்களில் குலையும் என்பதை அக்‌ஷரா அறியாதிருக்கட்டும்” எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்