Aran Sei

பழங்குடிகள் குறித்த ‘காடர்’ சிறுகதைத் தொகுப்பு : கலைவழி பரவும் அரசியல்

தமிழில் விளிம்புநிலை மக்களின் இலக்கியம் பலகாலமாக எழுதப்பட்டு வந்தாலும் அது ஓர் அரசியலாய் 90 களில்தான் உருப்பெற்றது. ‘எமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்’ என்கிற அடிப்படையில் எழுத்து ஒரு எதிர்நிலை அல்லது மாற்று அரசியலாய் முன்னெடுக்கப்பட்டது. விளிம்புநிலை மனிதர்கள் குறித்த படைப்புகள் தமிழில் பரவலாக வெளிவருகின்றன. தற்போது ‘காடர்’ என்கிற சிறுகதை தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

பழங்குடிகள் குறித்த ’காடர்’ எனும் சிறுகதைத் தொகுப்பை  வே.பிரசாந்த் எழுதியுள்ளார். எதிர் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை நடிகர், இயக்குனர், ஓவியர் பொன்வண்ணன் வெளியிட்டிருக்கிறார்.

இந்நூல் குறித்துப் பேசிய பொன்வண்ணன் ” காடர் புத்தகம் காடு குறித்த முழுமையாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட புத்தகமாகப் பார்க்கிறேன். யானையைப் பார்த்து மிரண்டு நிற்கும் மனிதர் கூட்டம் என்று துவங்கும் கதை, இறுதியில் முகாமிற்குக் காலில் சங்கிலியுடன் பினைத்துக் கொண்டு செல்வது போன்று முடிவுறுகிறது. காடு தான் இயற்கையின் ஆதி அடையாளமாக உள்ளது. ஆனால் கடந்த 200 ஆண்டுகளாக காடு ஒரு வேட்டை பொருளாக, பணப் பொருளாக மாற்றியுள்ளனர் மனிதர்கள் “ என்று கூறியுள்ளார்.

” சங்க இலக்கியங்களில் காடுகளில் தான் மனிதன் வாழ்க்கை தொடங்கியதாகப் பதியப்பட்டுள்ளது. 5 வகை நிலப்பரப்புகளில் முதன்மையாக காடுகளைதான் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். தேயிலை பயிரிடுவதிலேயே காடுகளைப் பணமாக பார்க்கும் போக்கு தொடங்கியது. பிரிட்டிஷ் காலத்திற்கு பிறகு துப்பாக்கி பயன்பாடு ஜமீன்களுக்கு வந்தது. அதன் வெளிப்பாடகவே மிருகங்களைக் கொன்று அதனை வீடுகளில் மாட்டி வைத்தனர். பின்னர், மலைகளில் இருந்து கனிம வளங்களை எடுக்க ஆரம்பித்தனர். அது முதல் தொடர்ச்சியாக 200 வருடங்கள் மலைகள் அளிக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

‘காடர்’ பழங்குடியின மக்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக பார்ப்பதாகவும், இயற்கையை நேசிக்காத அரசும், ஆளுமையும் மிகவும் மோசமானது என்றும் கூறிய அவர். நகரத்தில் உள்ள மக்கள் மலைவாழ் மக்களை வேற்று கிரக வாசிகளாகத்தான் நாம் பார்ப்பதாகவும், மனிதாபிமானம் இல்லாத பார்வையால் மலைவாழ் மக்கள் சிதைக்கப்படுவதை இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளதாகவும் நடிகர் பொன்வண்ணன் நூல் வெளியீட்டுவிழாவில் பேசியுள்ளார்.

 

நூல் குறித்து அதன் ஆசிரியர் வேபிரசாந்த் – யிடம் அரண்செய் பேசியபோது “ இந்நூல் நான் பார்த்த வாழ்வியல் சார்ந்தும் கள ஆய்வின் வழியாகவும் எழுதப்பட்டது.  இதை வெறும் புனைவாக மட்டும் இல்லாமல் சமூக எதார்த்த்தின் மேல் ஊடும்பாவுமாக இடையீடுகளை நிகழ்த்தியுள்ளேன்” என்றார்.

மேலும்,“ நான் பத்திரிகையாளனாக இருப்பதால் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்குபவனாக இருப்பதால் இன்றைய அரசியலை கலைவழி பேசியிருக்கிறேன். தமிழகப் பழங்குடிகள், காடழிப்பால் விளையும் மோசமான விளைவுகள் உள்ளிட்டவற்றைப் பேசியுள்ளேன்” என்று ’காடர்’ எனும் சிறுகதை தொகுப்பை  எழுதிய ஊடகவியலாளர் வே.பிரசாந்த் தெரிவித்தார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்