Aran Sei

தவறாக கைது செய்யப்படுபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தல்

CREDITS : ONMANORAMA

”ஒருவர் போலியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால், காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து, தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டனர்” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் தெரிவித்துள்ளார்.

”ஜனநாயகம், மாற்றுக் கருத்து மற்றும் கருப்புச் சட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் – சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசதுராகச் சட்டம் போன்றவை நம் சட்ட புத்தகத்தில் இருக்க வேண்டுமா?” என்கிற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் லோகூர் உரையாற்றினார்.

அப்போது, “இந்த கருத்தரங்கில், பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின் விடுதலை செய்யப்படுபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான அமைப்பு வேண்டுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் அளிக்க வேண்டும் என்றால், ஆம் கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். ஆனால், நான் இந்த தலைப்பில் இருந்து விலகி பேச விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, இந்திய குற்றவியல் நீதிமன்ற நடைமுறையில் பல்வேறு விவகாரங்களில் நஷ்ட ஈடுகள் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் ”இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தையும், தேசதுரோகச் சட்டத்தையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் என்னுடைய பார்வையில், இந்தச் சட்டங்கள் நீக்கம் செய்யப்பட மாட்டாது. சட்ட புத்தகத்தில் தனக்கான இடத்தை அந்தச் சட்டங்கள் வலுவாக பிடித்துள்ளன. அதுமட்டுமின்றி அந்த பட்டியலில், தற்போது தேசிய பாதுகாப்பு சட்டமும் இடம் பெற்றுள்ளது. மணிப்பூரில் தேசிய பாதுகாப்பு சட்டம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 90 வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, வரும் காலங்களில் அரசை எதிர்ப்பவர்களை  ஒடுக்க, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசத்துரோகச் சட்டத்துடன், தேசிய பாதுகாப்புச் சட்டமும் பயன்பட உள்ளது” என்று மதன் லோகூர் கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ”நமது வரலாற்றில், மனித உரிமை மீறலுக்காக நஷ்ட ஈடு வழங்குவது என்பது புதிதல்ல. 1968 – 1983 ஆம் ஆண்டு வரை (14 ஆண்டுகள்), சிறையில் அடைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட ருதுல் ஷாவுக்கு, உச்ச நீதிமன்றம் ரூ 30,000 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது. ராணுவத்தில் பணிபுரிந்து காணாமல் போன அல்லது மரணமடைந்த செபாஸ்டியன் ஹாங்க்ரே எனும் நபரின் குடும்பத்திற்கு, நீதிமன்றம் ரூ.11,00,000 வழங்கியது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1985 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசியர் பீம் சிங்கின் வழக்கில், நீதிமன்றம் ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கியது.  1980 ஆம் ஆண்டு, சஹேலி எனும் தன்னார்வல தொண்டு நிறுவன வழக்கில் உச்ச நீதிமன்றம் ரூ 75,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலாபதி பெஹரா வழக்கில் உச்ச நீதிமன்றம் ரூ 1,50,000 நஷ்ட ஈடாக வழங்கி உத்தரவிட்டது. போலியாக கைது செய்யப்பட்ட வழக்கில், விஞ்ஞானி நம்பி நாராயணணுக்கு உச்ச நீதிமன்றம்  ரூ.50,00,000 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது” என்று அவர் பட்டியலிட்டார்.

”இதை மக்கள் இரண்டு வகையில் எதிர்கொள்ளலாம். முதலாவது, நம்பி நாராயணன் வழக்கில் வழங்கப்பட்டத்தை போல அதிகளவிலான தொகையை நஷ்ட ஈடாக வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும். ஒருவர் போலியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால், காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து, தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டனர்” என்று முன்னாள் நீதிபதி மதன் லோகூர் கூறியுள்ளார்.

”இரண்டாவதாக, ஒருவருக்கு நஷ்ட ஈடு வழங்கினாலும், சிறையில் அடைக்கப்படும் நபரும், அவரது சுற்றத்தாரும் மன ரீதியாக எதிர்கொள்ளும் வலியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை சரி செய்ய நாம் பொறுப்பேற்க வேண்டும். எந்த குற்றத்தையும் செய்யாமல் சிறைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாததால் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் நபர், அவரது குடும்பத்தார், அவரது உறவினர்கள், அவரது நண்பர்கள் இத்தனை ஆண்டுகாலம் அனுபவித்த மன போராட்டத்தை எவ்வாறு ஈடு செய்வது?” என்று அவர் மதன் லோகூர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதியாக, “இதுதான் தற்போது இருக்கும் நீதிமன்ற குற்றவியல் நடைமுறை. இதன் வழியாக நாம் சமூகத்துக்கு என்ன சொல்ல முயல்கிறோம்?. இது தான் தற்போது எழும் கேள்வி. இதற்கான தீர்வு என்பது இரண்டு தான், நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், போலியாக கைது செய்யப்படுபவர்கள் எதிர்கொள்ளும் மனபோராட்டத்திற்கு, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் குற்றமற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்கள் வாழும் காலம் வரை அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இணைய வழி கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மதன் லோகூர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்