முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சமயம், நாகர்கோவிலை சேர்ந்த சிவராஜபூபதி என்பவர் அவரை விமர்சித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, தர்மராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நகார்கோவில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 505(2), 504 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
தன்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சிவராஜபூபதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், சிவராஜபூபதி மீது பதிவு செய்யப்பட்ட சட்டட பிரிவுகள் செல்லாது என்று கூறி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் இறுதியில் மனுதாரர் மகாபாரதத்தின் கடைசி அத்தியாயத்தை படிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். அந்த அதியாயத்தில், யுதிஷ்ட்ரர் சொர்க்கத்திற்கு சென்றபோது, அங்கே துரியோதனன் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதை பார்த்து யுதிஷ்ட்ரர் கடுமையான சொற்களால் துரியோதனை வசைபாடியதாகவும், அப்போது நாரதர், “சொர்க்கத்தில் இருக்கும்போது அனைத்து பகைமைகளும் முடிவுக்கு வந்துவிடும்” என்று சொன்னதாகவும் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மனுதாரருக்கு தேசிய காவியமான மகாபாரதம் பிடிக்காது என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், “பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டாற்பாற்று அன்று” என்ற திருக்குறளை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வழங்கிய தீர்ப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், மதத்தின் அடிப்படையில் மக்கள் தொகையின் எண்ணிக்கை மாறாமல் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.