Aran Sei

ஆந்திர நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு – சிபிஐ விசாரணை

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்ததாக 16 க்கும் மேற்பட்டவர்கள் மீது மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த மே 22-ம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் வந்த மனுக்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள்,  ஆந்திர அரசின் செயல்பாடுகளைக்  கண்டித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

அரசுக்கு எதிராக உத்தரவு வழங்கியதாக உயர் நீதிமன்றத்தைக் கண்டித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள் கூட ஊடகங்களிடம் உயர்நீதிமன்றத்திற்கு எதிராகவும் நீதிபதிகளுக்கு எதிராகவும் நேர்காணல்களை வழங்கியுள்ளனர். ”ஆந்திர பிரதேச ஆளுங்கட்சியின் அலுவலகத்தில் இருந்து, இந்த நேர்காணல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் ஜூலை 15 வரை அவதூறான பதிவுகளைப் பதிவு செய்ததற்காக இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் மணி அன்னாபுரெடி, கொண்டா ரெட்டி, தாமிரெட்டி, சுதீர் பாமுலா, ஆதர்ஷ் ரெட்டி, அபிஷேக் ரெட்டி, சிவா ரெட்டி, ஸ்ரீதர் ரெட்டி தாவூத்து, ஜலகம் வெங்கட்ட சத்ய நாராயணா , ஜி.ஸ்ரீதர் ரெட்டி, லிங்கா ரெட்டி, சந்து ரெட்டி, ஸ்ரீநாத் சுஸ்வரம், கிஷோர் ரெட்டி தரிசா (வெளிநாடு), சிரஞ்சீவி, லிங்கா ரெட்டி ராஜசேகர் ரெட்டி (வெளிநாடு) மற்றும் கே.கௌதமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ’தி நியூஸ் மினிட்’ தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் நேர்காணல் தருவதன் மூலமாகவும், நீதிபதிகள் மீது அவதூறான கருத்துக்களையும், மிரட்டல்களையும் சமூக வலைதளங்கள் மூலம் விடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரசைச்  சேர்ந்த 49 தலைவர்களுக்கும் நீதிபதிகளை அவமதித்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகள், உள்நோக்கத்துடன் தூண்டுவது, பகை, வெறுப்பை ஊக்குவிப்பது, குற்றங்கருதி மிரட்டுவது மற்றும் ஆபாசமான கருத்துக்களை மின்னனு வடிவத்தில் பரப்புவது என பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீதித்துறையை அவமதித்தன் பிண்ணனியில் பெரிய சதித்திட்டம் இருக்கிறதா என்பதை ஆராய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் நீதித்துறையை அவமதித்து பதிவாகியுள்ள இழிவான பதிவுகளை அகற்றவும், தவறான கணக்குகளைச் சட்டத்தின் படி முடக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது என ’என்டிடிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநில நீதித்துறை விவகாரங்களில் நீதிபதி ரமணா தலையிடத் தொடங்கியுள்ளார் எனவும் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடைய சில முக்கிய விவகாரங்கள், குறிப்பிட்ட சில உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன என்றும்  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி மூவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக ‘தி இந்து’  செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்