Aran Sei

“பலபேர் காலைப் பிடித்துதான் பலர் நீதிபதிகளாக வந்துள்ளனர்” – துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேச்சு

சென்னையில் நேற்று (14.01.21), துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், துக்ளக் இதழின் ஆசிரியர், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வாசகர் ஒருவர், ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடைய வீட்டிற்கு விதிகளை மீறி தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது தொடர்பான முறைகேடு புகாரை, உதாரணமாக எடுத்துக்கொண்டு பேசினார்.

2ஜி-க்கு இணையான ஊழல் – தமிழக பாஜகவை பாதிக்கும்- சுப்பிரமணியன்சாமி கருத்து

அந்த வழக்கில், தொலைபேசி இணைப்பை கொடுப்பதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதால், உயர் நீதிமன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் அவர்களை விடுவித்ததாக குருமூர்த்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய குருமூர்த்தி “லஞ்சம், ஊழல் செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் கருணை காட்டுகிறது. ஆகவே, லஞ்சம், ஊழல் எப்படி குறையும். ஏனென்றால் நீதிபதிகள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமோ, யார் காலையோ பிடித்துதான் பலபேர் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று கூறினார்.

‘பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா?’ – திமுக கேள்வி

மேலும் “தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்படாது. ஆகவே, அரசாங்கம் மாறுவதால் மட்டுமே ஊழல்வாதி பிடிபடமாட்டான். போலீஸ், சிபிஐ, நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அனைத்திலும் மாற்றம் வந்தால்தான், ஊழல்வாதிகள் சிறைக்கு போவார்கள்” என்றும் குருமூர்த்தி கூறினார்.

1987ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய குருமூர்த்தி “போஃபர்சில் கையும் களவுமாக பிடித்தோம். ஆனால், ஆட்சி மாறியதில், நீதிமன்றம் மாறியது. யாரை கையும் களவுமாக பிடித்தோமோ அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். ஆகவே, ஊழலை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை” என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்