Aran Sei

தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

தாருண் தேஜ்பால் மீதான குற்றம் உறுதி செய்யப்படவில்லை என்றும், குற்றம் சாட்டியுள்ளவரின் குற்றச்சாட்டுகளில் பல ஐயங்கள் உள்ளன எனவும் கூறி விசாரணை நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு முன் அளித்துள்ள தீர்ப்பு குறித்து இன்று பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டுள்ளன.

2013 டிசம்பரில் கோவாவில் ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த சம்பவம் அது. நானெல்லாம் அப்போது வாரம்தோறும் தேஜ்பாலின் ’டெகல்கா’ இதழைப் படிக்காமல் இருப்பதில்லை. நான் மட்டுமல்ல பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை ஏற்காதவர்கள் எல்லோருக்கும் டெஹல்காவின் நுணுக்கமான அரசியல் கட்டுரைகள் அன்று ஈர்ப்பை அளித்த்து. ஒரு மிக முக்கியமான ஆங்கில வார இதழாக டெஹல்காவும், முக்கிய எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் தேஜ்பாலும் புகழ் பெற்றிருந்த காலம் அது.

அந்தச் சமயத்தில்தான் தேஜ்பால் மீது தொடுக்கப்பட்ட இந்தப் பாலியல் அத்துமீறல் வழக்கு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. டெஹல்காவில் பணியாற்றிய ஒரு பெண் பத்திரிகையாளர் அந்த வழக்கைப் பதிவு செய்திருந்தார். கோவாவில் நடந்த ஏதோ ஒரு இரண்டு நாள் விழாவில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டிருந்தபோது இரவு 12.30 மணி அளவில் லிஃப்டில் இருவரும் இறங்கி வந்துள்ளனர். அப்போது தேஜ்பால் தன்னிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார் என அந்தப் பெண் பத்திரிகையாளர் குற்றம் சாட்டினார். அந்த லிப்டின் உள்ளே அவர் 15 நிமிடங்கள் வரை தேஜ்பாலுடன் போராட வேண்டியதாக இருந்தது என்பது குற்றச்சாட்டு. ஆனால் லிஃப்டுக்குள் அப்பபடியான ஒரு பாலியல் தாக்குதலுக்கு அவர் ஆளானாரா என்பதை நிறுவ லிப்டின் உள்ளே சிசி டிவி கேமரா ஏதும் இல்லை. எனினும் இருவரும் லிப்டுக்குள் நுழைந்த இடத்திலும், வெளியேறிய இடத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த காமராப் பதிவுகளின் ஊடாக சுமார் 15 நிமிடங்கள் வரை அவர்கள் உள்ளே இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்த வழக்கு ஒரு “ஹை புரொஃபைல்’ வழக்கானபின் காவல்துறையிடமிருந்து இன்றுவரை இதையெல்லாம் உறுதிப்படுத்தி எந்தத் தகவலும் பத்திரிகையாளர்களிடம் சொல்லப்படவில்லை.

பாதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அந்தப் பெண் பத்திரிகையாளர் கடைசிவரை தன் குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார். தான் அங்கிருந்த அந்த இரண்டு நாட்களிலும் தேஜ்பால் தன்னிடம் இப்படி நடந்து கொண்டார் எனவும் அவர் கூறினார். அப்படி நடந்து கொண்டார் என்றால் ஏன் இரண்டாவது நாளும் தனியாக அந்த நேரத்தில் அவருடன் லிப்டில் போக அவர் சம்மதித்தார் என்கிற கேள்வி கேட்கப்பட்டதா, அதற்கு அவர் என்ன பதில் சொன்னார், அல்லது மீண்டும் அப்படிச் சீண்டுவார் என அவர் நினைக்கவில்லையா, இல்லை employer / employee உறவின் விளைவாக அவருடன் லிப்டில் ஒன்றாக வர முடியாது என அவரால் மூர்க்கமாக மறுக்க இயலாமல் போய்விட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை.

கோவாவில் அப்போது பாஜக ஆட்சி. மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. கோவா அரசு எப்படியும் தாஜ்பாலைப் பழிவாங்கியே தீருவது என்பதில் உறுதியக இருந்தது. அந்த அளவிற்கு டெகல்கா இதழ் பாஜகவின் ஆத்துமீறல்கள் முதலியவற்றை அப்போது தோலுரித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தேஜ்பால் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கில்  மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தேஜ்பாலுக்கு ஆதரவாக உள்ளது என “நிறுவுவதற்கு” சுப்பிரமணிய சாமி  ஒரு முயற்சி செய்தார். கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சிக்குப் 10 ஆண்டுகளுக்கு முன் சோனியா அன்றைய பிரதமர் மன்மோகனிடம் ஏதோ தாஜ்பாலுக்கு ஆதரவாகச் செய்யச் சொல்லி அதற்கு மன்மோகன்சிங் பதிலெழுதியதாகக் கடிதம் ஒன்றைப் பத்திரிகையாளர்கள் முன் காட்டினார். ஆனால் அந்தக் கடிதத்திற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லை. காங்கிரஸ் அரசு தேஜ்பாலுக்கு ஆதரவாக உள்ளதாக ஒரு கருத்தை உருவாக்குவதே சு.சாமியின் நோக்கம்.

கோவா அரசால் கைது செய்யப்பட்டுச் சில மாதங்களுக்குப்பின் பிணையில் வெளிவந்து இருந்த தாஜ்பால் இந்த வழக்கை முன்வைத்துத் தன்னைப் பாஜக அரசு பழிவாங்க முயற்சிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசத் தொடங்கினார். ஆனால் காங்கிரஸ் அந்த அளவிற்கு தேஜ்பாலுக்கு ஆதரவாக்க் களம் இறங்கத் தயாராக இல்லை. ஒரு தர்ம சங்கடமான சூழலாகவே அது இதை எதிர்கொண்டது.

ஆக மொத்த்த்தில் பிரச்சினை அந்தப் பெண்ணுக்கும் தேஜ்பாலுக்குமானது என்பதிலிருந்து வேறு மட்டத்துக்கு மாறியது. அரசியல் இதில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியது.

சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ”இப்படியான ஒரு அத்துமீறலை தேஜ்பால் செய்வாரெனத் தான் நினைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை. குற்றம் சாட்டுபவர் சொல்வதுபோன்ற ஒரு பாலியல் அத்துமீறல் நடைமுறையில் சாத்தியமே இல்லை. அவர் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ஒரு பெண். புத்திசாலி, கவனமானவர், யோகா பயிற்சி அளிப்பவர்; வலுவான உடல் உள்ளவர். அத்துமீறல் செய்யும் நோக்கில் லிஃப்ட் சுவரில் சாய்க்க முயன்ற தேஜ்பாலைப் பிடித்து அவரால் தள்ள முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை” எனத் தனது 527 பக்கத் தீர்ப்பில் நீதிபதி கஷ்மா ஜோஷி கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆக இன்று தேஜ்பால் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேஜ்பாலின் டெஹல்கா பத்திரிகை இன்று இல்லை. இந்த எட்டு ஆண்டுகளில் கொஞ்ச நாட்கள்தான் அவர் சிறையில் இருந்தபோதும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு  ஆட்பட்டதோடு, வழக்கு, அதனூடாக எதிர்கொள்ள நேர்ந்த பிரச்சினைகள் என எத்தனையோ இக்கட்டுகளை அவர் சந்திக்க நேரிட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரால் இந்த காலகட்டத்தில் செயல்பட இயலாவிட்டாலும் ஒரு நாவலாசிரியராக அவர் தன் எழுத்தியக்கத்தைத் தொடர்ந்தார். Valley of Masks, Alchemy of Desire, The Story of my Assassin ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்து ஒரு நாவலாசிரியராகவும் இன்று அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். அமேசான் ப்ரைமில் வெளிவந்த அந்த மூன்றாவது நாவல் அவர் பெயரில் வெளிவரவில்லை.  பாகிஸ்தானிலிருந்து அவரைக் கொல்ல அனுப்பப்பட்ட கொலையாளிகள் பற்றியது. அப்படி தாஜ்பாலைக் கொல்வதன் மூலம்  பாஜக அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் முகமாக அது செய்யப்பட்டது எனக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பின் பா.ஜ.க அரசே அவருக்குக் காவல் பாதுகாப்பையும் அளிக்க நேரிட்டது.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று அவர்  குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த கோவாவில் இப்போதும் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது. தேஜ்பாலைக் குற்றச் சுமையிலிருந்து இன்று நீக்கியுள்ள இந்தத் தீர்ப்புக்கு எதிராக இன்றைய கோவா மாநில பாஜக அரசு மேல்முறையீடும் செய்துள்ளது.

இக்கட்டான இந்த எட்டு ஆண்டுகளில் தனக்குத் துணையாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருக்கும் தனக்காக வழக்காடிய அனைத்து வழக்குரைஞர்களுக்கும், நல்ல தீர்ப்பளித்த செஷன்ஸ் நீதிமன்றத்துக்கும் தேஜ்பால் நன்றி தெரிவித்துள்ளார். தனக்காக வழக்காடியவர்களில் ராஜீவ் கோமஸ் என்கிற வழக்குரைஞர் கொரோனா தாக்குதலுக்குப் பலியாகியுள்ளார். அதற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். தானும் குடும்பத்தினரும் முழுமையாக கோவா மாநிலக் காவல்துறையுடன் ஒத்துழைத்த்தாகவும், நீதித்துறையின் ஒவ்வொறு நடைமுறையையும் மத்தித்துச் செயல்பட்டதாகவும் தேஜ்பால் கூறியுள்ளார். தானும் தன் குடும்பமும் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர். இதற்கு மேல் தான் இப்போது வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை எனவும் பின்னால் இது குறித்து முழுமையாக ஒரு அறிக்கையை (statement) அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டிய அந்தப் பத்திரிகையாளர் தரப்பிலிருந்து ஏதும் கருத்து தெரிவிக்கப்பட்டதாகக் கண்ணில் படவில்லை. ஒரு பெண்ணிடம், அதுவும் தன்னிடம் பணியாற்றும் ஒருவரிடம், அதனூடான அதிகாரத்தைப் பயன்படுத்தி, வன்முறையாக அத்துமீறுவது என்பது  கடுமையான ஒரு குற்றம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அப்படியான குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டால் நாம் யாரும் கவலைப்படப் போவதும் இல்லை. ஆனால் இங்கே இந்த வழக்கில் அரசியல் குறுக்கிட்டுவிட்டது என்பதுதான் பிரச்சினை. அரசியல் குறுக்கிட்டு விட்டதால் அவர் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படக் கூடாது என்பதும் அல்ல. ஒரு வேளை தாருண் தேஜ்பால் குடிபோதையில் அந்தச் சில நிமிடங்களில் சிறிது அத்துமீறி இருந்தார் எனிலும் கூட அதற்கான தண்டனையை இந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர் நிறையவே எதிர்கொண்டு விட்டார்.

அவரது எழுத்துப் பணிகளும், அரசியல் விமர்சனங்ங்களும், ஆசிரியப் பணியும் தொடரட்டும்.

(கட்டுரையாளர் அ.மார்க்ஸ், ஒரு எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்