காஷ்மீர் மாநில மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்ததையும் எங்களின் தோளோடு தோள் நின்றதையும் நாங்கள் மறக்கமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 28), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அந்நூலை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்துள்ளார். மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வரவேற்புரை ஆற்றியுள்ளார்.
‘மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது’ –கேரள முதலமைச்சர்
சிறப்பு அழைப்பாளராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவின்போது பேசியுள்ள உமர் அப்துல்லா, “தமிழ்நாட்டில் இருந்து வெகுதொலைவில் ஜம்மு – காஷ்மீர் இருந்தாலும், எங்களுக்காக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார். காஷ்மீர் மாநில மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து. எங்களின் தோளோடு தோள் நின்றதை நாங்கள் மறக்கமாட்டோம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு விலக்கியபோது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். ஜம்மு காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் நான் இங்கு நிற்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டுடைய கொள்கையானது, இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மிகப் பெரிய நாடான இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. இங்கு வசிக்கும் மக்களில் இந்து மதத்தினர் என்ன அணிய வேண்டும், இஸ்லாமியராக இருப்பவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் நமது விருப்பம். அது கடவுளுக்கும் நமக்குமானது. ஆனால் அதில் கூட தலையீடும் அளவிற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “இதன் தொடர்ச்சியாகத்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்கமாலேயே எங்களது மாநிலத்தை இரண்டாக பிரித்தார்கள். யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். இந்திய வரலாற்றில் எங்குமே இதுபோல நடந்திருக்காது” என்று உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.