ஹரித்வார் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜிதேந்திர நாராயண் தியாகி (அண்மையில் இந்துவாக மாறுவதற்கு முன்பு அவரின் பெயர் வசீம் ரிஸ்வி), இறைதூதர் முகம்மது நபி மற்றும் முதல் மூன்று கலீஃபாக்களான(இஸ்லாமிய அரசின் தலைவர்கள்) அபுபக்கர், உமர் மற்றும் உஸ்மான் மீது ஹரித்வார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜிதேந்திர நாராயண் தியாகியின் புகாரின் பேரில் ஹரித்வார் காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள ஹரித்வார் காவல்துறை அதிகாரி ராகேந்திர கதியத், “எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
தன்னையும், தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த கிரி உட்பட இந்து மத சாமியார்களையும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கொலைச் செய்ய முயற்சி செய்ததாக ஜிதேந்திர நாராயண் தியாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிற மதத்தவர்கள் மீது வன்முறையை ஊக்குவிப்பதாக குர்ஆன் நூலை குற்றஞ்சாட்டியதோடு, அந்நூலில் இருந்து 24 வசனங்களின் மொழிபெயர்ப்பையும் தனது புகார் மனுவில் ஜிதேந்திர நாராயண் தியாகி மேற்கோள் காட்டியுள்ளார்.
‘இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க கொலையும் செய்வோம்’ – உ.பி. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
மேலும், எந்த அடிப்படையும் இல்லாமல் இது அல்லாஹ்வின் புத்தகம் என்று பரப்புரை செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று(டிசம்பர் 28), ஹரித்வாரில் தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 21 பேர் கொண்ட இந்து மத சாமியார்களின் கூட்டத்திற்குப் பிறகு இப்புகாரைச் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.