கொரோனா ஒரு தேசிய பெருந்தொற்றா அல்லது மாநிலத்தின் பிரச்சினை மட்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென், இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால், நாங்கள் தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 22), ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “கொரோனா ஒரு தேசிய பெருந்தொற்றா அல்லது மாநிலத்தின் பிரச்சினை மட்டுமா? இந்தச் சூழலைக் கையாண்டுக்கொள்ளுங்கள் என்று ஒன்றிய அரசு இதை மாநிலங்களிடம் விட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல், தானும் அதைச் சரியாகக் கையாளாமல் ஒன்றிய அரசு விட்டுவிட்டது. ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால், நாங்கள் தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.
’தடுப்பூசிகள் பெற வெளிநாடுகளிடம் கெஞ்சும் இந்தியா’ : சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்
“ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பு மருந்துகள் ஒதுக்கீடு போன்ற கொரோனா தொற்று நோய் ஒழிப்பு தொடர்பான அனைத்து முக்கியமான தேவைகளின் நிர்வாகமும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால், தடுப்பு மருந்துகளோ சிகிச்சைக்கான மருந்துகளோ எங்களுக்குத் தேவையானதை எங்களால் பெற முடியவில்லை,” என்று ஹேமந்த் சோரென் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், “உதாரணமாக, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சுமார் 3.5 முதல் 4 கோடி எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகள் தேவை. ஆனால் நாங்கள் இதுவரை 40 லட்சம் தடுப்பு மருந்துகள் மட்டுமே பெற்றுள்ளோம். மும்பை மாநகராட்சி, ஒரு உள்ளாட்சி அமைப்பாக இருந்தபோதிலும், மும்பை மக்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்த உலகளாவிய டெண்டரை கொடுக்க முடியும். அதற்குப் பெரிய பட்ஜெட் வேண்டும். ஆனால் ஜார்க்கண்டால் அது முடியாது. எங்களுக்குத் தேவையான அனைத்து தடுப்பு மருந்துகளையும், அதே போல் வாங்க வேண்டி வந்தால், எங்கள் மாநில அரசே திவாலாகிவிடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“மாநிலங்கள் தாங்களாகவே தங்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதை எவ்வாறு எங்களால் கையாள முடியும்? ஜார்கண்டை ஒன்றிய அரசு ஏன் மகாராஷ்டிராவுடனும் தமிழகத்துடனும் ஒப்பிடுகிறது. எங்கள் பட்ஜெட் மிகவும் சிறியது, பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்களை ஒன்றிய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்.” என்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் வலியுறுத்தியுள்ளார்.
source: indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.