Aran Sei

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என தனது கூட்டணி கட்சிகளை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மிரட்டியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கை மோசமான முறையில் அமல்படுத்தியதால், மக்களின் உயிர்கள் பறிபோனதாக ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சாவும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன.

முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் களம் இறங்கியுள்ளார். மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மாஃபியாக்களுக்கு இடையிலான கூட்டுதான், சட்டம் மோசமாக செயல்படுத்தப்பட்டதற்கு காரணம் என்று சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, “பிரதமர் நரேந்திர மோடி மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற முடியும் என்றால்,  மதுவிலக்கை ஏன் முதலமைச்சர்  நிதீஷ் குமாரால் முடியாது. இதை ஏன் ஒரு கௌரவப் பிரச்சினையாக்க பார்க்கிறார். இந்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 18), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சஞ்சீவ் குமார், மதுவிலக்கு தொடர்பான எந்தவொரு பிரச்சினை குறித்தும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு முன், முதலமைச்சருடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

“பீகாரில் நான்கு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். எல்லா கட்சிகளின் சித்தாந்தமும், வேலை திட்டமும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது வெளிப்படையான ஒன்று. கருத்து வேறுபாடுகள் இருந்தால், ஊடகங்களிடம் பேட்டியளிப்பதற்கு முன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சரிடம் விவாதிக்க வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

“முதல்வர் நிதிஷ் குமாரின் முடிவே இறுதியானது. அவர் எப்போதும் பீகாரின் வளர்ச்சி குறித்தே சிந்திப்பார். எந்தக் கட்சிக்கும் முதலமைச்சரின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அவர்கள் தனியாக முடிவெடுத்து கொள்ள சுதந்திரம் உண்டு. நீங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல விரும்பினால் யாரும் தடுக்க மாட்டார்கள். கூட்டணியிலும், அரசாங்கத்திலும் நீடித்துக்கொண்டே, அதன் முடிவுகளை விமர்சிப்பதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது” என்று டாக்டர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Source: IANS

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்