Aran Sei

‘சுஷாந்த் வழக்கில் கங்கனா விளம்பரம் தேடிக் கொள்கிறார்’ – ஜாவேத் அக்தர்

பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்து, கங்கனா மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கங்கனா ரனாவத், ஜூலை மாதம், ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் உரையாடினார்.

அதில், “ஜாவேத் அக்தர் ‘தற்கொலைக் கும்பலை’ (பாலிவுட்டில் நடிகர்களின் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்) சேர்ந்தவர்” என்றும் “மும்பையில் எதையும் செய்துவிட்டு அவரால் தப்பிக்க முடியும்” என்றும் கங்கனா பேசியிருந்தார்.

கங்கனாவின் குற்றசாட்டு பொய்யானது என்று கூறியுள்ள ஜாவேத் அக்தர், ஒரு முக்கியமான வழக்கில் தனது பெயரை கங்கனா தேவை இல்லாமல் இழுத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நேர்காணலின் போது கங்கனா ஜாவேத் அக்தரை ஒரு ‘வல்லூறு’ என்றும் அழைத்துள்ளார், இதனையும் ஜாவேத் அக்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா நடந்த சம்பவங்களை திரித்து, பொய்யான தகவல்களை பரப்புவதால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிதாக ஜாவேத் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார். “புகார்தாரருக்கு எதிராகக் நேர்காணலில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய்யானது, அவதூறானது, ஆபத்திழைக்கும் தன்மை கொண்டது, மேலும் பொறுப்பற்ற முறையில் உண்மையைப் புறக்கணிக்கும் நோக்கோடு செய்யப்பட்டுள்ளது” என்று அந்தேரி மாநகர நீதிபதியின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் நேர்காணலை யூடியூபில் லட்சக் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர் என்றும், அவருக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதன் மூலம் நடிகை கங்கனா பயனடைந்ததாகவும் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். இதனை, டைம்ஸ் ஆப் இந்தியா, ஏபிபி லைவ் போன்ற பிற செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டனர், என்று ஜாவேத் அக்தர் வாதிட்டுள்ளார்.

“இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் பகுதியாகும், விளம்பரம் பெற வேண்டும் எனும் வணிக நோக்கத்துடனும் தனிப்பட்ட நோக்கத்துடனும் செய்யப்பட்டுள்ளது,” என்று ஜாவேத் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

கங்கனாவின் பேச்சு ‘சரிசெய்யமுடியாத சேதத்தை’ ஏற்படுத்தியுள்ளதால் அதனை கருத்தில் கொள்ளுமாறு 75 வயதான பாடலாசிரியர் ஜாவேத் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் டிசம்பர் 3-ம் தேதி விசாரிக்க உள்ளது.

மும்பை, அந்தேரியில் உள்ள பெருநகர மாவட்ட  நீதிபதிக்கு முன் இந்தப் புகார் அளிக்கப்பட்டதாகச் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூன் 14 அன்று சுஷாந்த் தனது இல்லத்தில் இறந்து கிடந்தார். அவர் இறந்ததிலிருந்து, கங்னா ரனாவத் மற்றும் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு இடையே கடும் சர்ச்சை நடைபெற்று வருகின்றது.

சுஷாந்த் மரண வழக்கை மும்பை காவல்துறை கையாண்ட விதத்தை விமர்சித்த கங்கனா, மும்பை நகரில் வாசிப்பதில், தான் பாதுகாப்பின்றி உணர்வதாகக் கூறினார். கங்கனா, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட போது இந்த சர்ச்சை உச்சத்தை அடைந்தது. இதற்கிடையே, மத்திய அரசு கங்கனாவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பை வழங்கியது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்