Aran Sei

”ஆட்சியையே கவிழ்த்தவர் என் குடும்பத்தை எதுவும் செய்வார்”: பாஜக எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

வேலை வாங்கிதருவதாகக் கூறி பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அப்பெண் வெளியிட்ட காணொளியில், தான் தொடர்ந்து முன்னாள் அமைச்சரின் துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளார்.

அரசு வேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோலியின் காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இதுகுறித்து விசாரிக்க அம்மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்தது, அந்தக் குழு அமைச்சருக்கு சார்பாக செயல்படுகிறது என்று பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

இவ்விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே இரண்டு காணொளிகளை வெளியிட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், நேற்று (மார்ச் 26) மூன்றாவது காணொளியை வெளியிட்டிருந்தார்.

அதில், “எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், எனக்களிக்கப்பட்ட இந்த ஆதரவினால் அமைச்சரின் மீது புகார் அளிக்க உள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், ஜார்கி ஹோலி தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி உறுதி அளித்த பின்னர் பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

’பாஜக அமைச்சருக்கு எதிராகப் புகார் அளிக்க உள்ளேன்’ – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

இதைத் தொடர்ந்து, ஜார்கி ஹோலி மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 27) வெளியாகியுள்ள அப்பெண்ணில் நான்காவது காணொளியில், “கடந்த காலத்தில் ஒரு ஆட்சியையே கீழே தள்ளிய இவர். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர். இதன் பொருள் இவர் எவ்வளவு தூரத்திற்கும் சென்று என் குடும்பத்திற்கும் எனக்கும் தீங்கு விளைவிப்பார்.” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அச்செய்தியில், என் குடும்பத்தினர் முன்னிலையில் மட்டுமே நான் காவல்துறையிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்