Aran Sei

இஸ்லாமிய குடும்பங்கள் குறித்து தகவல் சேகரிப்பு – எதிர்ப்பால் திட்டத்தை கைவிட்ட போலீஸ்

Image Credits: Deccan Herald

ம்முவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில், குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை நிறுத்தியுள்ளனர்.

ஜம்முவின், பதிண்டி மற்றும் சுன்ஜ்வானில் ஆகியவை இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள். காவலர்கள், அங்குள்ள வீடுகளில் வாடகைக்கு வசிப்பவர்களின் விவரங்களை சேகரித்தது மட்டுமல்லாமல், வீட்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உள்ளூர்வாசிகளின் கூற்றின்படி, ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் காவலர்கள் இரண்டு படிவங்களை வழங்கியுள்ளனர். ஒரு படிவம் வாடகைக்கு வசிப்பவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளது. மற்றொரு படிவம் வீட்டு உரிமையாளர்களின் குடும்பத்தை பற்றிய முழுமையான விவரங்களைக் கேட்டுள்ளது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை, அங்குள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரி முகேஷ் சிங், “இதனை கவனத்தில் கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். “ஜம்மு மாவட்ட மூத்த எஸ்பி-க்கு உடனடியாக இந்தப் படிவத்தின் வடிவமைப்பைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“பதிதி மற்றும் சுன்ஜ்வான் பகுதியில் சரிபார்ப்பதற்காகப் பகிரப்படும் படிவத்தால் சிலர் அச்சம் அடைந்துள்ளதை நான் அறிவேன். இந்தப் படிவத்தில் தேவையை விட அதிகமான தகவல் கோரப்பட்டுள்ளது” என்று முகேஷ் சிங் தான் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளார்.

“குடியிருப்போர் விவரங்களை சரிபார்க்க ஜம்மு மாவட்டம் முழுவதும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக” கூறிய அவர் “உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்கள் கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பவர்களின் விவரத்துடன் உரிமையாளர்களின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களை சேகரிப்பது இதுவே முதல்முறை என்று வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் உரிமையாளர்களின் விவரங்களை மட்டும் சேகரித்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெயர், வயது, புகைப்படம், முகவரி, கைபேசி எண், வீட்டைக் கட்டிய தேதி, வீட்டின் புகைப்படம், வாகன விவரங்கள், குற்றப் பின்னணி இருப்பின் அது தொடர்பான தகவல்கள், அடையாளச் சான்று, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள், ஆதார் எண் மற்றும் கைபேசி எண்கள், உள்ளிட்ட தகவல்கள் இந்தப் படிவத்தில் கோரப்பட்டுள்ளன. பலர் இந்தத் தகவல்களை வழங்கியும் உள்ளனர்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் இது நடைபெற்றது அல்லது மாவட்டம் முழுவதிலுமிருந்து இந்தத் தகவல் கோரப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து ஆராய்ந்தபோது சில பகுதிகளில் மட்டும் நடைபெற்றது என்பது தெரியவந்தது” என ஜம்முவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஷேக் ஷகீல் அகமது தெரிவித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“மக்கள் தங்கள் வீடுகளின் ஜிபிஎஸ் இருப்பிடத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டனர். இது எங்கும் நடைபெறாத ஒன்று” என்றும் அவர் கூறியுள்ளார்.

“சிவில் சமூக உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ‘குறிப்பிட்ட பகுதிகளில்’ உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையைக் காவல்துறை நிறுத்தியுள்ளது” என்றும் ஷேக் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்