Aran Sei

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

credits : the indian express

ருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 4-ம் தேதி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ’குப்கர் தீர்மானம்’ வெளியிடப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்களையும் ஒன்றாக இணைந்து தடுக்கவும் ஜம்மு-காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், சுயாட்சி மற்றும் சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் உடனே எடுக்க வேண்டும் போன்ற திட்டங்கள் குப்கர் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து, அப்பிராந்தியத்தைச் சேர்ந்த கட்சிகள் ஒன்றிணைந்து, ‘குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ எனும் கூட்டணியை உருவாக்கினர். குப்கர் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜேகேபிசி) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை முக்கியக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இக்கூட்டணியின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு பிறகு, நேற்று (ஆகஸ்ட் 24) கூட்டணி தலைவர்களும், நிர்வாகிகளும் ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் குப்கர் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

அப்போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், “370 மற்றும் 35 ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் ஒரு பெரிய அரசியல் வெற்றிடமும், ஒரு நிச்சயமற்ற தன்மையும் உருவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடியின், ‘டெல்லியில் இருந்து தூரமானால், மனதில் இருந்து தூரமாவீர்கள்’ என்ற முழக்கத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்கதாக எதுவும் நடைபெறவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிரான சட்டரீதியிலான போராட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. மக்களின் சுதந்திரமும் ஜனநாயக உரிமைகளும் நசுக்கப்படுவது தடையின்றி தொடர்கிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

“சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் ஜம்மு காஷ்மிர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. அதன் காரணமாக, குற்றச்சாட்டுகள் கூட நிரூபிக்கப்படாமல், நூற்றுக்கணக்கான மக்கள் சிறையடைக்கப்பட்டுள்ளனர். கல் வீச்சு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு பணிகளுக்கு அனுமதி வழங்காதது போன்ற புதிய உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.” என்று தனது அறிக்கையில் குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது.

Source: New Indian Express

தொடர்புடைய பதிவுகள்:

பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது – குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தலைவர்கள் கருத்து

`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்