எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதி வழியில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த குப்கர் கூட்டணித் தலைவர்களை வீட்டுக்காவலில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வைத்துள்ள நிலையில், எங்களின் போராட்டம் தொடரும் என்று குப்கர் கூட்டணி அறிவித்துள்ளது.
டிசம்பர் 20 அன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், ஜம்முவுக்கு 43 தொகுதிகள் (முன்னதாக 37) என்றும், காஷ்மீருக்கு 47 தொகுதிகள் (முன்னதாக 36) என்றும் எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 அன்று, ஜம்முவில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பரிந்துரை குறித்து விவாதித்தனர். இப்பரிந்துரைகளை எதிர்த்து, ஜனவரி 1 அன்று, அமைதிவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாக கூட்டத்திற்கு பிறகு குப்கர் கூட்டணி தெரிவித்தது.
ஜிஎஸ்டி உயர்வு: பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாஜகவை தோற்கடிப்போம் – காங்கிரஸ்
இந்நிலையில், நேற்று(ஜனவரி 1), குப்கர் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முகமது தாரிகாமி, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களின் வீடுகளின் முன்னால் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, “காலை வணக்கம். 2022க்கு உங்களை வரவேற்கிறேன். சட்டவிரோதமாக மக்களை அவர்களின் வீடுகளில் கைது செய்து வைக்கும் அதே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருடன் ஒரு புத்தாண்டு இன்று. சாதாரண ஜனநாயக நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மிகவும் அச்சமடைந்துள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியுள்ள எம்.ஒய். தாரிகாமி, “நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்கள் போராட்டத்தை தொடர்வோம். எங்கள் குரலை எழுப்புவோம். நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
வீட்டுக்காவலை குறித்து குறிப்பிடுகையில், “காஷ்மீர் மக்களை இப்படித்தான் நடத்துகிறார்கள். இதுதான் காஷ்மீரில் அவர்களின் உண்மையான முகம். எல்லை நிர்ணயக் குழுவின் முன்மொழிவுகள் இப்பிராந்தியத்தில் பிளவை உண்டாக்கக் கூடியவை. இது காஷ்மீர் மக்களை மேலும் வலுவிழக்கச் செய்யும். காஷ்மீர் மக்களை வலுவிழக்கச் செய்ய விரும்புகிறார்கள். அவர்களின் நோக்கம் பிராந்தியங்களையும் சமூகங்களையும் ஒருவருக்கொருவர் எதிராக திருப்பிவிட்டு, வாக்குகளுக்காக மக்களைப் பிரிப்பதாகும். குப்கர் கூட்டணித் தலைவர்கள் விரைவில் கூடி, இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகளை வகுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.