Aran Sei

நினைவுக்குள் சுழலும் ரணம் – 21 ஆண்டுகளுக்கு பிறகும் அச்சுறுத்தும் ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல்

ஜாமியா மிலியா இஸ்லாமியா ‌மாணவர்கள் மீது 2019, டிசம்பர் 15 ல் தில்லி காவல்துறை நடத்திய மிருகத்தனமானத் தாக்குதல் குறித்த விவரங்கள் வரத் தொடங்கிய போது, ஏப்ரல் 2000 ல் ஜாமியா மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய  கொடூர தாக்குதல் நிகழ்வுகள்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தன. அந்த ஏப்ரல் 9 ம் நாள் இரவு தில்லி காவல்துறை கொடூரமாகத் தாக்கி, அதிகாரத்தைக் தவறாகப் பயன்படுத்தி  சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தது. 2019 டிசம்பர் தாக்குதலைப் பற்றி கேள்வி படும்போது 2000ஆம் ஆண்டு ஏப்ரல் தாக்குதல் பற்றிய நினைவு எனக்கு வந்ததற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

முதலாவது அவை இரண்டிற்குமிடையிலான ஒற்றுமை. இரண்டாவது, அந்த ஆண்டுதான் நான் பீகாரில் உள்ள என் சொந்த ஊரிலிருந்து பதினொன்றாம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்காக முதன்முதலாக ஜாமியா வந்தேன். அந்த நிகழ்வு நடந்து மூன்று மாதங்கள் கழித்து நான் அங்கு வந்திருந்தாலும், அந்த மாணவர்களின் நினைவுகளில் அது இன்னும் புத்தம் புதிதாக  இருந்ததுடன் அவர்கள் அதனால் ஏற்பட்ட மன, உடல் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. நான் நீதி கேட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் , சுவரெழுத்துக்களையும் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் பார்த்தேன். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூத்த மாணவர்களிடமிருந்து தாக்குதலின் கொடூரமான கதைகளைக் கேட்டேன். சஃபிக்குர் ரஹ்மான் கித்வாய் (SRK) உறைவிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர்களைத் தூக்கி எறிந்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். அங்கு என் சொந்த மாவட்டத்தைச் (சூபால்) சேர்ந்த மாணவர்கள் சிலரும் தங்கி இருந்தனர்.

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

மக்கள் ஜனநாயக உரிமைச் சங்கத்தின்(PUDR) உண்மை கண்டறியும் அறிக்கைகள் நெருக்கடிக் காலத்திற்குப் பின் மாணவர்கள் மீது இதுவரை நடந்திராத மிக மோசமான காவல்துறை தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறின. பிற உண்மை கண்டறியும் அறிக்கைகள், காவல்துறை ஏப்ரல் 9ம் நாள் பல்கலைகழக நூலகத்திற்குள் வந்து இரண்டு மாணவர்களை கூட்டிச் சென்றனர். இதனை எதிர்த்து மாணவர்கள் சாலையை அடைத்தனர். காவல்துறையினர் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கிடையில் பல்கலைக்கழக நிர்வாகத்தலைவர் தலையிட்டு மாணவர்களைச் சமாதானப்படுத்தி  அவர்களின் உறைவிடத்திற்குச் செல்ல வைத்தார். எனினும், மாணவர்கள் உறைவிடத்திற்குள் சென்றதும், திடீரென காவல்துறையினர் தாக்குதல் நடத்தி,  முழுமையாக பழிவாங்கும் நோக்குடன், தங்கள் பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர். மத்திய நூலகத்தில் தங்கள் தேர்விற்காகப் படித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்று தெரிவிக்கிறது உண்மை அறியும் குழு.

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட உண்மை கண்டறியும் குழு தங்கள் அறிக்கையில், இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், மறுநாள் ஏப்ரல் 10 ம் தேதி காலையில் காவலர்களை வைத்துத்  தாக்குதல் நடத்தியதற்கான எல்லா அடையாளத்தையும் அழித்தனர். அத்துடன் இரத்தக்கறைகளும் கூட கழுவிவிடப்பட்டன என்று தெரிவிக்கின்றன. அவர்கள் அந்த வளாகத்திற்குள் வந்தபோது எஸ்ஆர்கே உறைவிடம் (அதிகப்படியான  தாக்குதல் குவிக்கப்பட்ட இடம்) “நாசமாகி, அழிவின் தெளிவான ஆதாரங்களுடன் விளங்கியது.” அறைகளில், தாழ்வாரங்களில், படிக்கட்டுகளில் இரத்தக்கறைகளை உண்மை கண்டறியும் குழு கண்டது. இந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பல மாணவர்களும் உறைவிடங்களில் ஒன்றில்  இருந்த மசூதியில் இருந்தனர். ” என்னை கிரிமினல் என்றும் ஐஎஸ்ஐ முகவர் என்றும் ஒரு காவலர் அழைத்தார்,” என்று நினைவு கூர்ந்தார் ஒரு மாணவர். “காவல் துறை அதிகாரிகள் என்னைக் கடுமையாக அடிக்கத் துவங்கினார்கள். என்னை மசூதியிலிருந்து வெளியே இழுத்து வந்தார்கள். நான் துப்பாக்கியின் பின் பக்கக் கட்டையால் தாக்கப்பட்டேன். அதனால் என் கால் உடைந்தது. நான் வலியால் துடித்தேன். பிறகு நான் காவல்துறையின் ஜிப்சி வண்டியில் திணிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். வழி நெடுக என்னைத் தொடர்ந்து அடித்தனர். என் தாடியைப் பிடித்து இழுத்தனர்,” என்று ஒரு மாணவர், தேசிய மனித உரிமைகள் ஆணையருக்கு எழுதிய புகார் கடிதத்தில்  கூறியிருந்தார். மக்கள் ஜனநாயக உரிமை சங்கத்தின் அறிக்கை, காயப்பட்ட பல மாணவர்கள் இரவு முழுவதும் மருத்துவமனையில் கழித்தனர் என்றும், மறுநாள் காலையில் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் கூறுகிறது. ஆனால் யாரெல்லாம்  மருந்து கவனிப்புப் பெற்றார்கள் என்றும், “யார் மீதெல்லாம் ஐபிசி 307(கொலை முயற்சி) உள்ளிட்ட பல  குற்றச் சாட்டுகளை சுமத்தி மருத்துவ சட்ட  வழக்காக பதிவு செய்வது” என்பதற்காகவே காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர் என்ற சூழ்ச்சியை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.”

அதன் பிறகு 66 பேர் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மாலையில் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டபோது அவர் ” யாருக்காவது ஏதாவது சொல்ல வேண்டி உள்ளதா?”  எனக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிலர் “ஐயா எங்களுக்குத் தேர்வு உள்ளது…” என்று கூறிய போதும் அவர்களை விடுதலை செய்வதற்குப் பதிலாக திகார் சிறைக்கு இந்த நீதிபதி அனுப்பி விட்டார்.

சோகனூர் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் வேண்டும் – அரசிடம் கோரிக்கை விடுத்த திருமாவளவன்

அடித்து சிறைக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் எனக்கு அறிமுகமான ஒருவர் அண்மையில் என்னிடம்,” அதுதான் என் வாழ்க்கையில் மிக மோசமான இரவு,” என்று கூறினார். அப்போது அவர் இளங்கலை இறுதியாண்டு மாணவர். அவருக்கு அப்போது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ” என்னை திகாருக்கு அனுப்பியதால்  நான் கிட்டத்தட்ட எனது தேர்வுகளைத் தவற விட்டேன். நான் என் வாழ்க்கையின் அந்தப் பயங்கரமான நாட்களைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் நான் அதுபற்றி எதுவும் நடக்காதது போல் சென்று விடுவதும், எனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று கூறுவதும் பொய் கூறுவதாகும். நான் அனைத்தையும்  இன்றும் நன்றாக நினைவில் வைத்துள்ளேன். நான் உயிரோடு இருக்கும் வரை என் நினைவின் ஒரு பகுதியாக அது இருக்கும்,” என்று 21 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏதாவது பின்விளைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தன் பெயரை வெளியிட விரும்பாத அவர் கூறுகிறார்.

நல்வாய்ப்பாக, மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன. எனினும் அதே சமயத்தில் அந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட காவல்துறை அதிகாரிகளும் தப்பிவிட்டனர் என்பதும் இதில் அடங்கி உள்ளது. ஒரு நீதிமன்ற விசாரணைக்கு லெப்டினன்ட் கவர்னர் உத்தரவிட்டிருந்தாலும், எப்போதும் இது போன்ற விசாரணையின் முடிவுகள் போலவே இதுவும் இருந்தது.

விசாரணை  காவல்துறை துணை கண்காணிப்பாளர் (தெற்கு) தலைமையில் நடந்தது. பல அப்பாவி மாணவர்கள் மோதல்களுக்கிடையே மாட்டிக் கொண்டு, காவலர்களால் தவறாக அடிக்கப்பட்டனர். உள்ளூர் “நில மாஃபியாக்கள்’ தான் இந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதற்கு பொறுப்பு என்பது அவர் கருத்து.

இந்த இரண்டு தாக்குதல்களிலும் உள்ள குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் வெளிப்படையாக உள்ளன. இரண்டு நிகழ்வுகளிலும் இஸ்லாமிய சமூகத்தையும் அவர்களுக்குச் சொந்தமான  நிறுவனத்தையும் இழிவு படுத்தும், அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்கள் மீது, அவர்கள் எந்தவித ஆத்திரமூட்டும் நிலையில் இல்லாத போதும்,  கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டு, இனவாத அத்துமீறல்கள் நடந்துள்ளன. மேலும், இரண்டு நிகழ்வுகளிலும்  நிறுவப்பட்ட அனைத்து விதிமுறைகளையும், நடைமுறைகளையும் சிறிதும் வெட்கமின்றி மீறி காவல்துறை ஒரு கிரிமினல் மோசடி படை போல் செயல்பட்டுள்ளது‌.

உத்தரகண்ட் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 51 கோவில்கள் விடுவிப்பு – தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு

ஏப்ரல் 2000 மற்றும் டிசம்பர் 2019 ஆகிய இரண்டு தாக்குதல்களின் போதும் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு கூட்டணி ஆட்சி நடத்தியது என்பது வெறும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. 2000 ம் ஆண்டில் தில்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானியின் கட்டளையின் கீழ் இருந்தது. 2019 ல் அமித்ஷா தலைமையில் இருந்தது. இந்தத் தாக்குதல்கள் ஏறத்தாழ 20 ஆண்டுகள் இடைவெளியில் நடந்துள்ளன. ஆனால் இதனை ஒருவர் கூர்ந்து நோக்கினால் இந்த இரண்டு தாக்குதல்களிலும் தில்லி காவல்துறை ஒரே “கருவியை” பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிப் பாதுகாப்புப் பெற்று விட்டதைப் காண முடியும்.

ஒரு வகையில் 2019 ல் நடந்தது 2000 ல் நடந்ததன் மறு நிகழ்வுதான். 2000 ம் ஆண்டு தாக்குதலின் போது குற்றவாளிகள் தண்டிக்கப் படாததால் பல்கலைகழகத்தின் மீது இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறக்கூடும். இன்று, பெரும்பாலானவர்கள்  2000, ஏப்ரல் தாக்குதல்களை மறந்திருக்கலாம் அல்லது அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று காவல்துறையின் வன்முறையை எதிர்கொண்டவர்களின் நினைவில், அவர்கள் மீது நடத்தப்பட்ட அந்த மிருகத்தனமானத் தாக்குதல் பற்றிய நினைவுகள் எனது அறிமுக நண்பர் குறிப்பிட்டது போலப் பசுமையாகவே உள்ளன என்பதே உண்மை.

 

www.thewire.in இணையதளத்தில் மஹ்தாப் ஆலம் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்