Aran Sei

‘இந்தி தினத்தை மொழிகள் தினமாக அனுசரித்து, அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாட வேண்டும்’ – ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

ந்தி திவாஸை (இந்தி தினத்தை) பாஷா திவாஸாக (மொழிகள் தினமாக) கொண்டாட பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1949-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழியாக தேர்வு செய்யப்பட்டது. இந்நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

நேற்று (செப்டம்பர் 14), இந்தி மொழி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும்.” என்று தெரிவித்திருந்தார்.

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மேலும், தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்துப் பயன்படுத்துவதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், “இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்.” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

‘தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது, இந்தியைத் திணிக்கும் செயல்’ – அமித் ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

இந்நிலையில், இந்தி தினம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. இந்தி தினத்தை மொழிகள் தினம் என அனுசரித்து, அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடும் போதுதான், இந்தியா வலு பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்