Aran Sei

“என் கணவரின் அடிப்படை உரிமைகளை பறிக்காதீர்கள்; அவருக்கு சிகிச்சை அளியுங்கள்” – ஹனி பாவுவின் மனைவி வேண்டுகோள்

டெல்லி பல்கலைக் கழகத்தில், இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்த ஹனி பாபு, பீமா கோரேகான் வழக்கில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது, அவருடைய கண்பார்வையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், சிறை நிர்வாகம் அவருக்கு உரிய சிகிக்சை அளிக்கவில்லை என்றும், அவருடைய மனைவி மற்றும் சகோதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை…

பீமா கோரேகான் வழக்கில் கைதாகி 2020, ஜூலை முதல் விசாரணை ஏதும் இல்லாமல் தண்டனை கைதியாக இருக்கும் ஹனி பாபு, தலோஜா சிறையில் தீவிரமான கண் நோய்க்கு ஆளாகி இருக்கிறார். அவருக்கு கன்னம், காது, முன்நெற்றி உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் வரை பரவியிருக்கும் இடது கண் வீக்கம், மூளை வரையிலும் பரவி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்க முடியாத வலியால் உறங்கவும் முடியாமல் அன்றாட பணிகளில் ஈடுபடவும் முடியாமல் தவிக்கிறார். சிறையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தன்னுடைய கண்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்கு கூட முடியாமல், அழுக்கு துணிகளை கொண்டு துடைத்துக் கொள்ளும் அவலம் நேர்ந்திருக்கிறது.

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

ஹனி பாபு தன்னுடைய இடது கண்ணில் முதன்முதலாக வலியை உணர தொடங்கியது (மே 3, 2021) முதல், மெல்ல மெல்ல மங்கலான கண்பார்வையாகவும் தீவிர வலியாகவும் அது உருமாறியது. இந்த கண் நோய்க்கு மருத்துவம் பார்க்கும் வசதி சிறையில் இல்லை என்பதை சிறை மருத்துவர் தெரிவித்ததையடுத்து, ஹனி பாபு  கண் மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற கோரிக்கை வைத்தார். ஆனாலும் அவர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படவில்லை, அழைத்து செல்வதற்கு காவல் அதிகாரி இல்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. தலோஜா சிறை கண்காணிப்பாளருக்கு, அவருடைய வழக்கறிஞர்கள் மே 6-ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பிய பிறகே அவர் வாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மே 7-ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார்.

பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

வாசி அரசு மருத்துவமனையில், கண் மருத்துவர் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு சில பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைத்து விட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவரது நிலை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளான போதும் துணைக்கு அதிகாரி இல்லை என்கிற காரணத்தை சொல்லி அவரை அடுத்த முறை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஹனி பாபுவின் வழக்கறிஞர் பயோஷி ராய், மே 10ஆம் தேதி சிறை கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் எட்டு முறை அழைத்தும் அவர் தொடர்புக்கு வரவில்லை. பிறகு, இரவு எட்டரை மணியளவில், ஹனி பாபுவின் நிலையை அறிந்திருப்பதாகவும், மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் ஜெயிலர் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது. மேலும் தாமதப்படுத்தாமல் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கண்காணிப்பாளருக்கு, மீண்டும் ஹனி பாபுவின் வழக்கறிஞர்கள் மின்னஞ்சலில் அறிவுறுத்தினர். அந்த மின்னஞ்சலில் நிலைமையின் தீவிரம் பற்றியும் ஒரு நாள் தாமதமானாலும் சீர் செய்ய முடியாத படி முழுமையாகவோ பகுதியாகவோ கண் பார்வையை இழப்பது மட்டுமில்லாமல், மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மே 11ஆம் தேதி அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ்

கடந்த சில நாட்களாக நாங்கள் பதட்டத்தோடு இருக்கிறோம். அடிப்படை தேவைக்காகவே இந்தளவுக்கு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது என்பதே கடும் மன உளைச்சலை தருகிறது. பல அழைப்புகளுக்கு பின்னரும் சிறையிலிருந்து இன்றைக்கும் உரிய பதிலை நாங்கள் பெற முடியவில்லை.  ரகசிய பாணியில் இயங்கும் இந்த அமைப்புமுறை, சரி செய்யவே முடியாத பாதிப்புகளை சிறைவாசிகளுக்கு ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே ,  தீவிரமான பாதிப்புகளின் போது உடனடியாக உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை  இருக்க வேண்டும் என்று கோருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் வேண்டுவது, இந்திய அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கிற உரிமைகளைத்தான்.

–  ஜென்னி ரொவேனா (ஹனி பாபுவின் மனைவி), எம்.டி.ஹரிஷ் , எம்.டி.அன்சாரி (சகோதரர்கள்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்