Aran Sei

சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் சிஏஏ போராட்டக்காரர் : மகனுக்காக பரப்புரை செய்யும் 83 வயது தாய்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 2019 ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அகில் கோகோய் சார்பாக அவரது 83 வயது தாய், அவர் போட்டியிடும் தொகுதியில் பரப்புரை செய்து வருகிறார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக, அகில் கோகோய் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கைத் தவிர, தேசிய புலானாய்வு அமைப்பு தாக்கல் செய்த வழக்கு உட்பட மற்ற அனைத்து வழக்குகளிலும் அகில் பிணை பெற்றார்.

பிணை மறுக்கப்பட்ட அந்த ஒரு வழக்கானது, முதலில் கௌஹாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA), அவர் மீது தேச துரோகம், குற்றச் சதி, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதைத் தொடர்ந்து, பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, அசாம் மாநிலத்தின் உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள அசாம் மாநில சட்டபேரவை தேர்தலில் சிவசாகர் தொகுதியில், அவரது ரைஜோர் தள கட்சியின் சார்பில் அகில் கோகோய் போட்டியிடுகிறார்.

அண்டை மாவட்டமான ஜோர்ஹாட்டில் உள்ள செலங்காட்டைச் சேர்ந்த அகில் கோகோய்யின் தாயான பிரியாடா கோகோய், கடந்த ஏழு நாட்களாக சிவசாகர் தொகுதியில் முகாமிட்டு, அவரது மகனுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

” 20 கோடி லஞ்சம், பாஜகவில் சேர்ந்தால் ஜாமீன் ” – கைது செய்யப்பட்ட அகில் கோகாயிடம் பேரம் பேசிய என்ஐஏ

“நான் என்னுடைய மகனுக்காக மட்டுமே பரப்புரை செய்கிறேன். என்னுடைய மகன் விடுதலையாவதை பார்க்க விரும்புகிறேன். மக்களால் மட்டுமே என்னுடைய மகனைச் சிறையிலிருந்து விடுவிக்க முடியும் என்பதை நான் நன்கு அறிவேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது, அவர் சிறை வாழ்க்கையிலிருந்து விடுதலையாவதற்கான முதல் படியாக இருக்கும்.” என்று பிரியாடா கோகோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

84 வயதில் அவருக்கு முதுமை தரும் பல நோய்கள் உள்ளன என்றாலும், ஒரு நாள் கூட அவர் பரப்புரையை தவறவிடவதில்லை என்று ரைஜோர் தளத்தின் செயல் தலைவர் பாஸ்கோ டி சைக்கியா குறிப்பிட்டுள்ளார்.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

மேலும், “அனைவராலும் அன்பாக மா என்று அழைக்கப்படுகிறார். மா மிகவும் சுறுசுறுப்பானவர். அச்சுறுசுருப்பே நம்மை எந்நேரமும் உற்சாகத்தில் வைத்திருக்கும். காலை முதல் மாலைவரை, சிவசாகர் தொகுதியின் ஒவ்வொரு சந்துகளுக்கும் தெருகளுக்கும் சென்று தன்னுடைய மகனுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறார். இம்முதுமையிலும் துளிர்த்தெழும் அவரது மனஉறுதி எங்களைப் பிரமிக்க வைக்கிறது.” என்று ரைஜோர் தளத்தின் செயல் தலைவர் பாஸ்கோ டி சைக்கியா நெகிழ்ந்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்