Aran Sei

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் யாழ்பாண மேயர் கைது – விடுதலைப் புலிகளை ஆதரித்தாரா?

யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்டது தொடர்பாக நேற்றிரவு (ஏப்ரல் 8) 8 மணியளவில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ், அசுத்தம் ஏற்படுத்துவோரிடம் அபராத பணத்தை வசூலிப்பதற்காக யாழ்ப்பாணம் நகரக் காவல் படை என்ற குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நிறுவனங்களுக்கு குழி பறிக்கும் இலங்கை அரசு – அம்பிகா சத்குணநாதன்

மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழுவானது, பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், எச்சில் உமிழ்வோரிடம் அபராதம் வசூலிக்கும் என்று மேயர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்தக் குழு பயன்படுத்திய சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட சீருடையை ஒத்திருப்பதாக கூறி யாழ்ப்பாணம் காவல்துறையினர், தங்களது முதற்கட்ட விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

நன்றி : Tamilwin

இதனையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், விசாரணையின் அடுத்தக்கட்டமாக  நேற்று (ஏப்ரல் 8) இரவு யாழ்ப்பாணம் மாநகர மேயர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் யாழ்ப்பாணம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

அங்கு நடந்த சுமார் ஆறு மணி நேர விசாரணைக்குப் பின்னர், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 8) காலை வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குச் சென்ற சட்டவல்லுனர்கள், மேயர் வி.மணிவண்ணனை சந்திக்க கோரியபோது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இக்கைது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதையே அரசு விரும்புகின்றது என்றும் இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜபக்சேவுக்கு உறுதியளித்த மோடி

கனடா நாட்டு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “யாழ்ப்பணம் மேயர் கைது செய்யப்பட்டமைக்கு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சமூகத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளமையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

Source : Tamilwin

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்