Aran Sei

அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?

2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.கவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (21/11/20) அமித் ஷா சென்னை வந்துள்ளார்.

அவருக்குச் சென்னை விமான நிலைத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர் ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்று அவரை வரவேற்றுள்ளனர்.

தமிழகம் வந்தடைந்த உள்துறை அமைச்சர் ”சென்னை வந்தடைந்தேன். தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

 

சென்னை விமான நிலையித்திலிருந்து லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.30 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அப்போது, மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்புரையாற்றுகிறார், தமிழக அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாலை 6.00 மணியளவில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளார்.

அமித் ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று காலை முதலே ட்விட்டரில் #கோபேக்அமித்ஷா (#gobackamitshah) என்னும் ஹேஷ்டேக் ட்ரண்டில் உள்ளது. இந்தியா முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் #கோபேக்அமித்ஷா என்னும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் வெளியே வந்த அமித் ஷா அங்கு கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் கையசைத்தபடி நடந்து வந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்து அமித் ஷாவை நோக்கி ஒருவர் பதாகையை வீசிய காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அந்த பதாகையில் #GoBackAmitShah என்ற வாசம் எழுதியிருந்ததாகவும், அதை வீசியவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமித் ஷாவின் வருகை குறித்து அரண் செய் – யிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி “இது அடிப்படையில் ஒரு அரசியல் வருகை. இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடமிருந்து எவ்வளவு இடங்களைப் பெற முடியுமோ அவ்வளவு இடங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உள்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வருகை” எனக் கூறினார்.

”2011 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சத்தில் இருந்த போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி எப்படி அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றதோ, அதே போல இந்தமுறை அதிமுக தலைமையை உருட்டி மிரட்டி அதிக இடங்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பயணமிது” என்று அவர் தெரிவித்தார்.

“இந்த வருகையினால் விளைந்த பயன் என்ன என்பது வரும் நாட்களில் தெரியும். வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மேற்கொண்ட பயணம் என்பதெல்லாம் இந்த அரசியல் பயணத்தை மறைப்பதற்காகப் போர்த்திக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு போர்வை” என மூத்த பத்திரிகையாளர் மணி அரண்செய் – யிடம் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்