Aran Sei

அணு உலை அவசியமா – வரலாற்றிலிருந்து நாம் கற்பது என்ன?

“சாக்கலேட் தொழிற்சாலைகள் எவ்வளவு பாதுகாப்பானவையோ அவ்வளவு பாதுகாப்பானவை அணு உலைகள்” என்று செர்னோபில் அணு உலைகளின் நிர்வாக அதிகாரி சொல்லி ஒரு வாரம் கழித்து செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது. செர்னோபில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த பகுதி. இன்றைய உக்ரைனின் தலைநகர் கீவில் இருந்து 130 கிமீ தொலைவிலும் பெலாரஸ் நாட்டில் இருந்து 20 கிமீ தூரத்திலும் உள்ளது. செர்னோபில் அணு உலை விபத்தில் சில நூறு பேர் மரணம் அடைந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு நகரங்களிலும், நூறு கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளான பெலாரஸ், ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளில் அணுக்கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. செர்னோபில் விபத்து அரசியலில் ஏற்படுத்திய தாக்கமும் அதிகம். சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் செர்னோபில் அணு உலை விபத்தின் பங்கு பெரேஸ்ட்ராய்க்காவின் பங்கைவிட அதிகம் என்று மிகையில் கோர்பச்சேவ் சொன்னார். அன்றைய அதிபர் மிகையில் கோர்பச்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியில் சீர்திருத்தம் செய்யக் கொண்டு வந்த திட்டம் தான் பெரேஸ்ட்ராய்க்கா.

‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்

விபத்து நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின்பும் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக இருக்கிறது செர்னோபில். தவறாக வடிவமைக்கப்பட்ட அணு உலையும், அணு உலையை இயக்கும் திறமையற்ற ஊழியர்களும் தான் செர்னோபில் விபத்திற்கு காரணம் என்று கண்டறிந்தார்கள். செர்னோபில் போன்று வேறு அணு உலைகள் வடிவமைக்கப்படாததால், மற்ற அணு உலைகள் விபத்திற்கு உள்ளாகாது என்று அறிவித்தனர், ஆராய்ச்சியாளர்கள். ஆனால், ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து நடந்தது. எந்தத் துறையிலும், எவ்வளவு பாதுகாப்புகள் இருந்தாலும் விபத்துகள் நடக்கும், அவற்றை தவிர்க்க முடியாது என்பது தான் உண்மை.
1986இல் விபத்து நடந்த செர்னோபில், இன்றைக்கு எப்படி உள்ளது? செர்னோபில் விலக்கு மண்டலம் என்பது 2800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பெலாரஸ் உக்ரைன் ஆகியநாடுகளில் இந்த விலக்கு மண்டலம் பறந்து விரிந்திருக்கிறது. இன்றைக்கு அந்த பகுதி பசுமை மண்டலமாக மாறி இருக்கிறது. பல பறவைகள், காட்டுப்பன்றிகள், சிவிங்கி பூனைகள், கருப்பு நிற சதுப்புநில கோழிகள் ஆகியவையும் சுதந்திரமாக வாழ்கின்றன. அழியும் நிலையில் இருந்த ப்ரெசால்வ்ஸ்கி குதிரைகள் அங்கே பல்கி பெருகியிருக்கின்றன. 1998 இல் முப்பது குதிரைகளை விலக்கு மண்டலத்தில் கொண்டு போய் விட்டனர். இன்றைக்கு அவை 150 ஆக பெருகியிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தால் மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள், அழியும் நிலையில் உள்ள ஐரோப்பிய காட்டெருமைகளை செர்னோபில் விலக்கு மண்டலத்தில் வளர்க்கலாம் என்று திட்டமிட்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் படிக்கும்பொழுது மிக மோசமான அணு உலை விபத்து நடந்த இடம் சில ஆண்டுகளில் உயிர் வாழத் தகுதியானதாக ஆகிவிடும் என்ற எண்ணம் தோன்றும். உண்மை அதுவல்ல. வன விலங்குகள் உயிர்வாழ ஆரம்பித்திருக்கும் செர்னோபில் மனிதர்கள் உயிர் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது. மனிதர்கள் எப்பொழுது செர்னோபில்லில் வாழலாம் என்ற கேள்வி எழும். இந்த கேள்விக்கான பதில், 24000 வருடங்கள்! நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 2021இல். 26020 வாக்கில் மக்கள் செர்னோபிலில் வாழலாம். அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுபவர்களிடம், செர்னோபில் விபத்தைச் சுட்டிக்காட்டினால், வாகனங்களில் செல்லும்பொழுது விபத்து நடக்கிறது. அதற்காக வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா என்று கேட்பார்கள். அவர்களுக்கான பதில், வாகன விபத்து நடந்த இடத்தின் வழியாக அடுத்த சில மணி நேரங்களில் வாகனங்கள் செல்லலாம். ஆனால், அணு உலை விபத்து நடந்த இடத்தில் 24000 ஆண்டுகளுக்கு யாரும் போக முடியாது. அடுத்ததாக, சில விபத்துகள் நடந்தது என்பதற்காக அணு மின்சாரத்தை வேண்டாமென்று சொல்லலாமா என்று கேட்கிறார்கள்.
இந்தியாவில் கிடைக்கும் மின்சாரத்தில் அனல் மின்சாரத்தின் பங்கு 55%. இது நிலக்கரியை எரித்துத் தயாரிக்கப்படுவது. இது சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது ஒரு வாதம். இந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. சரி, இந்தியாவில் உற்பத்தியாகும்  மின்சாரத்தில் அணு மின்சாரத்தின் பங்கு எவ்வளவு? வெறும் 2%. இது உயிரி எரிபொருட்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை விட ஒரு சதவிகிதம் குறைவு. இந்த இரண்டு சதவிகித மின்சாரத்தை வேறு வழிகளில் எளிதாக தயாரிக்கலாம். ஆனால், கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரில்லையா, “பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா” என்று, அதுபோல அணு மின்சாரம் தான் வேண்டுமென்று ஒரு கூட்டம் விரும்புகிறது. ஏனென்று தான் தெரியவில்லை.
கட்டுரையாளர் – Dr கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்