Aran Sei

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

மாதவிடாய் குறித்து சட்டமன்றத்தில் பேசினால், அவையின் புனிதம் கெட்டுவிடும் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பாஜக  உறுப்பினர் தனா ஹாலி தாரா தெரிவித்திருந்தார். அது ஒரு பொருட்படுத்தக்கக் கருத்தன்று; இருந்தாலும் பாஜகவின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவது முக்கியமானதாகும்.

பழம் தரும் ஒரு மரத்தடியில் மாதவிலக்குக் கொண்ட ஒரு பெண் நின்றால் அந்தப் மரத்தின் பழம் கொடிய கசப்பாக மாறிவிடும். அவள் தானியத்தைத் தொட்டால் அது விதைப்பதற்கு உதவாது. முளைக்கும் தன்மையை இழந்துவிடும். பூச்செடியின் அருகில் சென்றால் செடி சுருங்கி வாடி வதங்கிவிடும்.மரத்தின் அடியில் அவள் அமர்ந்தால் அதன் பழங்கள் பழுப்பதற்கு முன்பு அழுகிவிடும். கண்ணாடியில் அவள் முகம் பார்த்தால் கண்ணாடி அழுக்குப் படிந்துவிடும். கூர்மை வாய்ந்த கத்திமுனை மழுங்கிவிடும். அவள் யானைத் தந்தத்தைப் பார்த்தால் தந்தத்தின் பளபளப்பு போய்விடும்.

அருணாச்சல பிரதேசம்: ‘புனிதமான சட்டப்பேரவையில் அசுத்தமான மாதவிடாய் குறித்து பேசாதீர்கள்’ -பாஜக எம்எல்ஏ

தேனீக்களைப் பார்த்தால் அக்கூட்டத்திலுள்ள தேனீக்கள் அனைத்தும் இறந்துவிடும். அவள் பார்வையால் இரும்பும் பித்தளையும் துருப்பிடித்து விடும். மாதவிலக்கு ரத்தத்தை நாய் முகர்ந்து பார்த்தால் நாய்க்கு பைத்தியம் பிடித்துவிடும். அந்த நாய் கடித்தால் கொடிய விசமாக மாறி மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும்.

மாதவிலக்கின் போது பெண்கள் தனித்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மாதவிலக்கான பெண்ணைத் தொட்டால் விலங்கு கிடைக்காது. மீன் பிடிக்கச் செல்பவர்களுக்கு மீன் கிடைக்காது. மாதவிலக்கான பெண்கள் மாட்டில் பால் கறக்கக்கூடாது. அதை குடிக்கவும் கூடாது. நெருப்பைத் தொடக்கூடாது. பொதுவிழியில் நடக்கக்கூடாது. விண்மீன்களைப் பார்க்கக்கூடாது.

உலகின் பல்வேறு மதங்களிலும் மாதவிடாய் குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன.கிறிஸ்தவத்தின் பழைய ஏற்பாடு இவ்வாறு கூறுகிறது.

முருகன் சுப்ரமணியன் ஆன கதை – சூர்யா சேவியர்

“இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலை வரை தீட்டுள்ளவனாக இருப்பான். அவள் மாத விலக்காக இருக்கும் போது எதன் மேல் படுத்துக் கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலை வரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.

அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். கணவனும் மாலை வரை தீட்டுள்ளவனாக இருப்பான். அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலை வரை தீட்டு உடையவனாக இருப்பான்.அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.

ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். அந்த நாட்களிலும் அவள் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும்.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.

ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும், இன்னொன்றை தகனப் பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.(பழைய ஏற்பாடு:லேவியர்:15:19-28)

பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 306) மாதவிடாய் காலத்தில் பெண்கள் குரானைத் தொடக்கூடாது என்று சிலரும், அல்லாஹ் நபிகளுக்கு குரானை வரிவடிவத்தில் வழங்கவில்லை.ஒலி வடிவத்தில் தான் வழங்கினார்.எனவே தொட்டால் தவறில்லை என்று வாதிடுவோர் சிலரும் இஸ்லாத்தில் இருக்கிறார்கள். குரானின் தொடக்கத்தில் தூய்மை இல்லாதவர்கள் இதை தொடக்கூடாது என்று சொல்வதை வைத்துக் கொண்டு, அது மாதவிலக்கிற்கும் பொருந்தும் என தொடக்கூடாது என வாதிடுவோர்கள் கருத்தாக இருக்கிறது.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

சைவ மதத்தை பரப்புவதில் முன்னின்ற யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் மாதவிலக்கான பெண்களுக்கு கடுமையான விதிமுறைகளை வகுக்கிறார். தூரஸ்திரி முதனாள் சண்டாளிக்கும் (கொலை செய்யக்கூடிய புலைச்சிக்கு சமமானவள்), இரண்டாம் நாள் பிரமக் கொலை (பிராமணரைக் கொல்லுதல்) செய்தவளுக்கும், மூன்றாம் நாள் வண்ணாத்திக்கும் சமமாவாள்.  அதனால் மூன்று நாள் யாதொரு கருமத்துக்கும் சமமானவள் அல்ல. நாய், பன்றி, கோழி, பருந்து, கழுகு என்பவைகளையும், புலையர், ஈனர், அதீஷதர், விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களைப் பார்த்தல் முதலியனவாம். அதாவது மாதவிலக்கானவள் நாய்,பன்றி உள்ளிட்டவைகளுக்கு இணையாக வைத்து எண்ணப்பட வேண்டியவள் என்கிறார். காஞ்சி மடத்தின் மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர் இன்னும் பல படிகள் மேலே செல்கிறார். கோவில்களுக்கு வந்து செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு மாதவிலக்கு தீட்டே காரணம் என்கிறார். மேலும் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு மாதவிலக்கு அடைந்த பெண்கள் வெளியே சுற்றி திரிவதால் நாடு பூராவும் தீட்டு பரவுகிறது என்கிறார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் ஏராளமாய் செல்கிறார்கள். இந்த இயக்கத்தில் மாதவிலக்கு ஒரு தடை இல்லை. மாதவிலக்கு அடைந்த பெண்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்கள் அங்கு அதிகமாகச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். இத்தகைய செயலைக் கடுமையாக விமர்சித்து குங்குமம் வார ஏட்டிற்கு ஜெயேந்திரர்  பேட்டியளித்தார். அதில் இத்தகைய செயல் நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

மாதவிடாய் என்ற பூப்பு குறித்த இந்தக் கருத்துகள் மதங்கள் மூலமாகவே  நிலை நிறுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது. மதங்கள் இதை நிலைநிறுத்த அடிப்படைக் காரணம் என்ன? அதற்கான வரலாற்று பின்புலம் என்ன? பூப்படைதல் எப்போதும் தீட்டாகவே கடைபிடிக்கப்பட்டு வந்ததா?மாதவிடாய் எனும் குருதிப்போக்கு அருவருப்பாகவும், தீட்டாகவும் சமூகத்தில் கருதப்படும் சூழல் எதனால் உருவானது?அது மனித மனங்களுக்குள் ஊடுருவி வேர் கொள்ளச் செய்ய எது காரணமாய் அமைந்தது?  மதங்கள் உருவாவதற்கு முன்பு இதுபற்றிய பார்வை என்ன?

மாதவிடாய் எனும் பூப்பு அருவருப்பானதா? யார் சொன்னது? அது செழுமையின் அடையாளம் என்கிறது சில சான்றுகள். நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா கீழப்பாவூர் கிராமத்தில் கருவேப்பிலைச் செடியை முதன்முதலாக நடும் போது மாதவிலக்கான பெண் நட்டால் நன்றாக வளரும். மேலும் மாதவிலக்கான பெண் விதை நெல்லை எடுத்துக் கொடுத்தால் விளைச்சல் நன்றாக வரும் என்ற கருத்து நிலவுகிறது. தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ரெட்டிவலசு எனும் கிராமத்தில் மாதவிலக்கு அடைந்த பெண் மிளகாய் செடியை நட்டால் மிகுந்த விளைச்சல் தரும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது.

வரலாறு அறிவோம்: தேரிக்காட்டு கருப்பட்டி ரயில் – சூர்யா சேவியர்

பொள்ளாச்சி வட்டம் ஆனைமலைப் பகுதியில் சரியாக விளையாத நிலங்களில் கல்யாணம் ஆகாத கன்னிப்பெண் மாதவிடாய் ஆன தினங்களில் வயலைச் சுற்றி ஓடினால் விளைச்சல் அதிகமாகும், நிலம் செழிப்படையும் என்ற நம்பிக்கை உள்ளது.

வட அமெரிக்காவில் கதிர்கள் நோயினால் பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு கொண்ட பெண்கள் ஆடையின்றி வயல்வெளிகளில் இரவில் நடந்து திரிவது வழக்கமாக உள்ளது. ஐரோப்பாவில் பயிரைப் பாதிக்கும் பூச்சிகளை ஒழிக்க மாதவிலக்கடைந்த பெண்கள் ஆடைகளை இடுப்பு வரைத் தூக்கிக் கொண்டு வெறும் காலோடும், முடியாத கூந்தலோடும் வயல்வெளிகளில் நடந்து செல்வர் என்று பிளினி கூறுகிறார்.

பூப்பு என்ற சொல் பூத்தல் என்ற பொருளையே தருகிறது. புஷ்பவதி என்ற வடமொழிச் சொல்லும் கூட பூத்தல் என்பது தான். ருது என்ற வடமொழிச் சொல்லும் பருவநிலையைக் குறிக்கும் சொல் தான். தாந்திரிகத்தில் பெண்ணுறுப்பிற்கு லதா என்று பெயர். தாவரம் கனிகளைத் தருவது போல பெண்ணுறுப்பு குழந்தைகளைத் தருகிறது என்பதால் பெண்ணுறுப்பு லதா என அழைக்கப்பட்டு, அதிலிருந்து தாவரக் கொடியாக மாறுகிறது. கருவுறுதலுக்கு முன்பு பூப்பு நடப்பதால் பூப்புக்குருதி குஷ்மா அல்லது புஷ்பா எனப்படுகிறது.

மனித சமுதாயத்தின் ஆரம்ப கட்டமான ஆதிப் பொதுவுடமை சமூகத்தில் இயற்கையின் ஆவேசத்தின் முன்னால் மனிதன் சக்தியற்று இருந்தான். அந்தச் சமூகத்தில் உற்பத்தியானது சாதாரண உற்பத்தியாளர்களையே நம்பியிருந்தது. உணவு தேடுவதற்கும், வேட்டையாடுவதற்கும் பல மனிதர்கள் தேவைப்பட்டனர். அதிக மனிதர்கள் இருந்தால் ஆபத்து இல்லை. குறைவாக இருந்தால் மரணத்தில் முடியும். இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். இனப்பெருக்கம் என்பது பொருளாதாரத் தேவையிலிருந்தே பிறக்கிறது. “லோகாயதவாதக் கருத்தோட்டத்தின்படி, கடைசிக்கும் கடைசியிலே வரலாற்றில் நிர்ணயமான காரணப் பொருளாக விளங்குவது உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் இனப்பெருக்கமும் தான். ஆனால் இது இருவகைப்பட்ட தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய சாதனங்களை உற்பத்தி செய்வது. அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும், அவற்றைப் பொறுத்து தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது. மற்றொரு பக்கத்தில் மனிதர்களையே உற்பத்தி செய்வது, அதாவது மனித இனத்தைப் பெருக்கி வருவது என்கிறார் ஏங்கெல்ஸ்.

இனப்பெருக்கம் தான் பொருள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வாழ்க்கைச் சூழலில் இனம்பெருக்கம் குறித்த அறிவியல் உண்மையை அன்று மனிதன் அறிந்திருக்கவில்லை. எனவே மாதவிடாய் குருதியே குழந்தையாக வெளிப்படுகிறது எனக் கருதினார்கள். ஆதிமனிதர்கள் மட்டுமின்றி அரிஸ்டாட்டில், பிளினி போன்றோரும் மாதவிடாய் குருதி நின்ற பிறகு கருப்பையில் தேங்கும் குருதியிலேயே கரு உருவாகிறது என நம்பினார்கள். இதுவே உயிரை உருவாக்கும் குருதியாகும். உலகில் நிலவிய இந்தக் கருத்து காவிரியிலும் எதிரொலித்தது. கும்பகோணம் சிவவாக்கியர் சித்தர் பாடிய பாடல்கள் அதில் தனிச்சிறப்பு கொண்டவை.

” ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

 

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்

மாதம்அற்று நின்றலோ வளர்ந்துரூபம் ஆனது

நாதம்ஏது வேதம்ஏது நற்குலங்கள் ஏதடா?

வேதம்ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா

ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன

சீறுகின்ற மூடனேஅத் தூமைநின்ற கோலமே.

தீட்டந்தீட்ட மென்றுநீர் தினமுழுகு மூடரே

திட்டமாகி யல்லவோ திரண்டுகாய மானது

பூட்டகாய மும்முளே புகழுகின்ற பேயரே

தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.

மாதவிடாய் குருதி தூய்மை என்பதிலிருந்தே தூமை என்று பாடுகிறார் சிவவாக்கியர் சித்தர்.

காதலர் தின வரலாறு – சூர்யா சேவியர்

மனித இனப்பெருக்கத்திற்கு ஆதாரமாக மாதவிடாய் குருதி அமைகிறது என்ற ஆதிமனிதனின் நம்பிக்கையானது அவர்களது வேளாண்மைச் சடங்கிலும் வெளிப்பட்டது. விதைப்புக்கு முன்னர் ஒரு கல்லை நட்டி அதன்மீது செந்நிற குங்குமத்தைப் பூசுவது வட இந்தியாவில் பில்லர் என்ற இனக்குழு மட்டுமல்லாது பரவலாக இருக்கும் நடைமுறையே. மாதவிடாய் குருதி இங்கு குங்குமமாக வெளிப்படுகிறது. நிலத்தின் உற்பத்தி ஆற்றலைக் குறிக்கும் குறியீடே இச்செயல். மொகஞ்சதாரோ, எகிப்தில் தொல் பொருள் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற தாய் தெய்வ உருவங்களில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மாதப் பூப்புற்ற பெண்களும், கருவுற்ற பெண்களும் செந்நிற சாயத்தைப் பூசிக் கொள்வது உலகம் முழுமையும் பரவலாக காணப்படுகிறது.

இப்பூச்சு அவர்களை நாடி வரும் ஆண்களை எச்சரித்து விலகிச் செல்ல செய்வதுடன் செழிப்பாற்றலை பாதுகாக்கவும் உதவுகிறது. திருமணத்தில் மணமகளின் நெற்றியில் செந்நிறச் சாயம் பூசப்படுகிறது. இச்சாயம் பிற ஆண்கள் அவர்களிடம் நெருங்காது தடுக்கும் குறியாகவும், அவளது கணவனுக்கு அவள் குழந்தை பெற்றுத் தருவாள் என்பதன் குறியீடாகவும் அமைகிறது. இந்தியாவில் பெண்கள் நெற்றியில் இடும் குங்குமமும் பூப்புக்குருதியின் வெளிப்பாடே என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. இத்தகைய செழிப்பாற்றலின் குறியீடாக இருந்த மாதவிடாய் குருதி ஏன் தீட்டாக மாறியது என்ற கேள்வி எழுகிறது. விடை இல்லாத வினா இல்லை தானே?

ஆதிமனிதர்களிடம் நிலைபெற்றிருந்த கூட்டு உழைப்பும், அதனால் ஏற்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே வேலைப் பிரிவினையை உருவாக்கியது. ஆண்கள் வேட்டையாடவும், பெண்கள் பாண்டங்கள் செய்தல், கூடை முடைதல், தாவரங்களைச் சேகரித்தல், உணவு சமைத்தல் போன்ற வேலைகளைச் செய்தனர். இந்த வேலைப் பிரிவினை பெண்ணின் நிலையை உயர்த்தியது.

பெண்கள் செய்த வேலைகள் நிரந்தரமான வருவாய் ஈட்டும் வேலையாகவும், ஆணின் வேட்டையாடுதல் சந்தர்ப்பத்தைப் பொறுத்தும் அமைந்தன. குலம் முழுமைக்கும் தேவையான பொருளை அவனால் கொண்டு வர இயலவில்லை. இதனால் குலத்தில் பெண்களின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. இது அவர்களை குலத்தின் தலைமை தாங்கவும் செய்தது. இதனால் கூட்டு திருமண அமைப்பில் தாய் மாத்திரமே அறியப்பட்டாள். தந்தை யாரென்று தெரியாது.

முருகனின் தாய் கொற்றவை என அறியப்படுகிறாள். கொற்றவையின் கணவர் யாரென அறியப்படவில்லை. ஏனெனில் குல மூதாதையாக தாய்வழியே தான் அனைவரும் ஒன்றுபடுத்தப்பட்டனர். சமூகத்தில் தாய்வழி மதிப்பீடே உயர்ந்து நின்றதால் அதை தாய்வழிச் சமூகம் என வரலாறு உணர்த்துகிறது. தாய் எந்தளவு உயர்ந்தவளாக இருந்தால் என்றால், ஆதிமனிதர்கள் வேட்டையாடிய குகைகளில் உள்ள சித்திரங்களில் மூன்று வகையான உருவங்கள் இருந்தன. 1.மனிதனின் கை 2. பெண்ணுறுப்பு 3.காயம்பட்ட விலங்கு.

பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர்

இதில் பெண்ணுறுப்பு புதிய மனிதர்களை உருவாக்கும் கருவியாக மனிதனால் பார்க்கப்பட்டது. தாய்வழிச் சமூகத்தில் இனப்பெருக்கம் என்ற செழிப்பை அடையாளப்படுத்திய சின்னமாக பெண்ணுறுப்பு இருந்ததால் தான், இதன் வளர்ச்சி நிலையாக யோனி வழிபாடு அமைந்தது. பெண்ணுறுப்பைத் தாமரை மலருக்கு இணையாகப் பார்த்தார்கள். தாமரைக்கு “புண்டரீகம்” என்று பெயர்.

கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்

கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!

“பாடல் புண்டரிகத்த செம்பதுமம்” (இரகுவம்சம்-குலமு-3)

 

“புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்

பரிந்து படுகாடு நிற்ப”-(திவ்ய பிரபந்தம்-45)

தாமரையை புண்டரீகம் என்ற சொல்லால் அழைத்தனர். இதுவே பெண்ணுறுப்பைப் பயன்படுத்தி திட்டும் வசைச் சொல்லாகவும் இருக்கிறது.

சமுதாய அமைப்பில் தோன்றிய முதல் வேலைப் பிரிவினையாக அமைந்த கால்நடை வளர்ப்பையொட்டிய சமூகத்தில் படிப்படியாக நிகழ்ந்த மாற்றம் தாய்வழிச் சமூகத்தைச் சிதைத்து தந்தை வழிச் சமூகத்தை நிலைநிறுத்தியது. இதன் விளைவாகப் பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். பணிமகளாக்கப்பட்டாள்.ஆணின் காம இச்சைக்கு அடிமையானாள். குழந்தை பெறும் சாதனமாகிவிட்டாள்.

இதனால் பூப்பு என்ற செழிப்பு சாபமாக மாறியது. பெண்குறி வழிபாடு லிங்க வழிபாடாக உயர்ந்து நின்றது. மாதவிடாய் குருதியின் மீதான ஆதிமனிதர்களுக்கு இருந்த அச்சம் அறுவருப்பானதாக மாறியது.மறுபுறம் புனிதமானவளாகவும், அசுத்தம் உள்ளவளாகவும் பெண் கட்டமைக்கப்பட்டாள். மாதவிடாய் தீட்டாக மாறியும் சில இடங்களில் செழிப்பின் அடையாளமாக இருப்பது எப்படி?

“இனக்குழு வாழ்வின் மிச்ச சொச்சங்கள் பாரம்பரியமான இந்திய சமூகத்தின் முக்கிய குணங்களாகும்”(தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-1959:266)

மேலும் இன்று மக்கள் தொகை பெருக்கமானது சமுதாயத்தைச் சார்ந்திராத உயிரியல் காரணங்களினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை.

நாம் வாழும் சமுதாயம் பொருள் உற்பத்தி முறை வளர்ச்சியடைந்த சமூகமாக இருக்கிறது. இச்சமூக அமைப்பில் பொருள் உற்பத்தியே சமூக வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. பொருள் உற்பத்தியும், அதன் வளர்ச்சியும் தான் சமூக வளர்ச்சியையும், மக்கள் தொகை பெருக்கத்தையும் நிர்ணயிப்பதாக இருக்கிறது. எனவே மனித இனப்பெருக்கத்தின் பூப்பு என்பது செல்வாக்கு இழந்து வாழ்வியல் சடங்காக மாறி நிற்கிறது. புனிதம் தீட்டு என்பதெல்லாம் வேறோன்றுமல்ல. அது ஆதிக்க வர்க்க மதிப்பீடுகள் மட்டுமே.

பாரதமாதாவுக்கு மாதவிடாய் உண்டா? அது புனிதமா? தீட்டா? இவர்களுக்கு பாரதமாதா என்பதும் பல்லிளிக்கும் அரசியல் சார்ந்த உருவமே.

கட்டுரையாளர்: சூர்யா சேவியர், அரசியல் செயற்பாட்டாளர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்