Aran Sei

தமிழகத்தில் மீண்டும் ஒரு சாத்தான்குளம் நிகழ்வா? – மணிகண்டனுக்கு நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதால் தான் மணிகண்டன் உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவரின் குடும்பத்தினர், அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதுகளத்தூர் வட்டம், நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். முதல் தலைமுறை பட்டதாரியான இவர், கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் பி.ஏ (ஆங்கில இலக்கியம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (4/12/21) அன்று, மணிகண்டன் உரம் வாங்கி வருவதற்காக தனது நண்பர் சஞ்சயுடன், இருசக்கர வாகனத்தில் (TN 05 CD 2641- PULSAR) முதுகளத்தூருக்குச் சென்றுள்ளார். அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மணிகண்டனின் வாகனத்தை மறித்துள்ளனர். மணிகண்டன் வண்டியை நிறுத்தாத நிலையில், அவரை காவலர்கள் விரட்டிச் சென்று பிடித்து, காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, மணிகண்டனை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லும்படி, அவரின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர் காவல் நிலையம் சென்ற மணிகண்டனின் தாயார், அவரை அங்கிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மிகவும் சோர்வான நிலையில் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மணிகண்டன், ஞாயிற்றுக்கிழமை (5/12/21) நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மணிகண்டனின் குடும்ப உறுப்பினர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையின் துணை கண்காணிப்பாளருக்கு, மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ்பாண்டியன் அளித்துள்ள புகாரில், காவலர்கள் வண்டியை நிறுத்தக் கூறியபோது, மணிகண்டன் நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியதாகவும், காவல்நிலையம் அழைத்துச் சென்று கம்பியால் பிறப்புறுப்பில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையின் கடுமையான சித்ரவதையால் தான் மணிகண்டன் உயிரிழந்திருப்பதாகவும், மணிகண்டனை தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவரின் மர்மமான மரணத்தில் உள்ள சந்தேகங்கள் களையப்பட்டு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்