திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய “கால அவகாசம்” தேவை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று கூறியுள்ளது.
ஆர்ஐடி ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியப் பாலியல் பலாத்காரச் சட்டத்தின் கீழ் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதால், திருமணம் என்ற சமூகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த நிலைப்பாடு பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது எனப் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ஆண் தனது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடலுறவு மேற்கொண்டால் அது கற்பழிப்பு குற்றமாகாது. 2017 அக்டோபரில், உச்ச நீதிமன்றம் மனைவியின் வயதை 18 ஆக உயர்த்தியது.
“மேரிட்டல் ரேப்” எனப்படும் மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்யும் குற்றம் உலக அளவில் பல நாடுகளில் குற்றமாக அறிவிக்கப் பட்டிருந்தாலும் இந்தியாவில் இன்னும் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் 75% பெண்கள், திருமணப் பந்தத்தில் வல்லுறவால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐநா மக்கள்தொகை நிதியம் தெரிவித்திருக்கிறது.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
“கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது என்பது நம் வீடுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்முறையின் மிகப்பெரிய வடிவமாகும். திருமணம் முடிந்தபிறகு எத்தனை முறை பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது என்பது ஒருபோதும் புகாரளிக்கப்படுவதில்லை”என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
“திருமணத்திற்கு பிறகு நடைபெறும் உடலுறவுகளில் மனைவியின் சம்மதம் தேவையில்லை எனும் பாலியல் வல்லுறவு போக்கே இங்கு நிலவுகிறது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.