Aran Sei

ஹத்ராஸ் வழக்கு – சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியில் தொடர்வதேன்? – உயர் நீதிமன்றம் கேள்வி

Image Credits: Scroll

“ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோத தகன வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, வழக்குடன் சம்பந்தப்பட்ட அந்த மாவட்ட நீதிபதியைப் பதவியில் தொடர அனுமதிப்பது நியாயம்தானா?” என்று அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

லக்னோவில், நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் பங்கஜ் மிதல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது வழக்குடன் தொடர்புடைய ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லட்சரின் பணியிடத்தை மாற்றினால்தானே நியாயத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய முடியும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலைக் காவல்துறையினர் நள்ளிரவில் கட்டாயப்படுத்தி தகனம் செய்தனர். இது ஒரு கூட்டு முடிவு என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

முன்னதாக, “இது ஒரு கூட்டு முடிவாக இருக்கும் பட்சத்தில், ஹத்ராஸ் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து உத்தரப்பிரதேச அரசு அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லையென அக்டோபர் 12-ம் தேதி நீதிமன்றம் தெரிவித்தது.

நவம்பர் 2-ம் தேதி அரசு வழக்கறிஞர், மாவட்ட நீதிபதியின் பணியிடம் மாற்றம் பற்றிய கேள்வி குறித்து அரசிடம் ஆலோசிப்பதாக நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார். அடுத்த விசாரணைத் தேதியான நவம்பர் 25 அன்று பதிலளிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், இடைநீக்கம் செய்யப்பட்ட ஹத்ராஸின் மாவட்டக் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துப் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை இரவில் தகனம் செய்வதற்கான முடிவை இருவரும் சேர்ந்து எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த முறை, விசாரணைக்கு முன் இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐயிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தோராயமாக, விசாரணை எப்போது முடிவுபெறும் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

குடும்பத்தின் வேண்டுகோள்

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதால், அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின் உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்குச் செல்ல விரும்புவதாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்காக ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மாநில அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் சீமா கூறியுள்ளார்.

“குடும்பத்தினருக்கு, இழப்பீட்டின் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குடும்ப உறுப்பினர்களில் சிலர் அதைப் பெற விரும்பவில்லை எனும் ஆதாரம் இல்லாத குற்றசாட்டை முன்வைத்து, பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு சில அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமா குஷ்வாஹா, இது தொடர்பாக மாவட்ட நீதிபதியின் கடிதம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரால் அந்தக் கடிதத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஆனால் அரசு வழக்கறிஞர், சீமாவின் வாதத்தை மறுத்து, அதுபோல் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த விசாரணை நடைபெறுவதற்கு முன், மத்திய ரிசர்வ் காவல் படையின் பொறுப்பான அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்