சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், உதவி மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
குடிசைகள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு அப்போதை முதலமைச்சர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். ஏழை, எளிய மக்களுக்குத் தரமான கான்கிரீட் வீடுகளை இலவசமாக கட்டி தர வேண்டும் என்ற சேவை நோக்கத்தில் தான் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.
வீட்டு வாடகை, பராமரிப்பு தொகை என மிக குறைந்த தொகையை மட்டுமே மக்களிடம் வசூலித்து வந்த குடிசை மாற்று வாரியம், பயனாளர்கள் தங்கள் வீடுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதை வலுத்துவதாக கூறி வீட்டின் மதிப்பில் 10 விழுக்காடு தொகையை வசூலிக்க ஆரம்பித்தது.
ஏழை மக்களால் இந்த 10 விழுக்காடு தொகையையே தர இயலாத சூழலில், ஒன்றிய அரசுடன் இணைந்து அனைவருக்குமான திட்டத்தில் கீழ், பயனாளிகளின் பங்களிப்பை 5 முதல் 6 லட்ச ரூபாய் என நிர்ணயித்து, கடந்த அதிமுக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
பயனாளிகளால் இந்த தொகையைச் செலுத்த முடியுமா என்பதை ஆராயாமல், சேவை நோக்கமாக உருவாக்கப்பட்ட குடிசை மாற்றுவாரியத்தின் வீடு அளிக்கும் திட்டம் தற்போது லாப நோக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
கே.பி. பார்க்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்காமல், கொரோனா வார்டாக அதிமுக அரசு பயன்படுத்தியது.
அரசு காலம் தாழ்த்திக் கொண்டே சென்றதை அடுத்து மக்கள் போராட்டம் நடத்தி அந்த குடியிருப்புகளில் குடியேறினர். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் அரசாணையின்படி ரூ. 1.5 லட்ச கொடுத்தால் மட்டுமே வீடுகளை ஒதுக்க முடியும் என குடிசை மாற்று வாரியம் அறிவித்தது.
இந்நிலையில், அங்கு கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பு மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது தொடர்பாக, உதவி மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என, பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் ”கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருந்தால், கண்டிப்பாக கட்டிடம் தரமானதாக இருக்காது” என்றும் கூறியுள்ளார்.
”நிர்வாக பொறியாளர், அவரின் கீழ் உதவி நிர்வாக பொறியாளர், அவரின் கீழ் உதவிப் பொறியாளர் என்ற அடுக்கில் தான் பொறியாளர் துறை இயக்குகிறது. உதவிப் பொறியாளர் கட்டிடத்தை மேற்பார்வையிட்டாலும், அதை நிர்வாக பொறியாளர் உறுதி செய்த பிறகே கட்டிடத்திற்கான தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும். அதே போல கட்டிடத்தைச் செயற்பொறியாளர் ஆய்வு செய்த பிறகே இறுதித் தொகை வழங்கப்படும். இதன் அடிப்படையில், கே.பி. பார்க் கட்டிடம் தொடர்பாக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது நிர்வாகப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் மீது தான்” என வீரப்பன் குறிப்பிட்டுள்ளார்.
”கட்டுமானம் தொடங்கிய காலத்தில் இருந்து முடிக்கும்வரை அனைத்து நிலைகளிலும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. இது ஒரு பொறியாளர் தன்னிச்சையாக செயல்படுவதை தடுக்கிறது. கே.பி. பார்க்கி விவகாரத்தில் இந்த கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
மேலும், “பொறியாளர்கள் அதிகம் பணியாற்றும் துறைகளான பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என அனைத்து துறைகளிலும் பொறியாளர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பொறியாளர்கள் குறைவாக இருப்பதால், இருக்கும் பொறியாளர்கள்மீது அதிகப் பணிச்சுமை விழுகிறது. இதனால், ஏற்படும் தவறுகளுக்குத் துறை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.” என வீரப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டும் வீடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். பணிச்சுமையால் அவதியுறும் பொறியாளர்களின் சிக்கலைப் புரிந்து கொண்டு காலியாக உள்ள அனைத்து பொறியாளர் பணியிடங்களையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதன் வழியாக மட்டுமே, கே.பி. பார்க் போன்ற தரமற்ற கட்டிடங்கள் உருவாவதை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ள வீரப்பன் இதை விடுத்து கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தொடருமேயானால் மௌலிவாக்கம் போல கட்டிடங்கள் தரைமட்டமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என வீரப்பன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.