தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) விசாரணை நடத்தவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை நீதிபதி கரீம் கான் தெரிவித்துள்ளார்.
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் அத்துமீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் “புவிசார் அரசியல் பிளவு” குறித்து தான் அறிந்திருப்பதாக கூறியுள்ள நீதிபதி கரீம் கான், சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் என்றும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இந்த விசாரணை ஏற்புடையதாக இல்லை என்று கூறியுள்ள வெனிசூலா அதிபர் மதுரோ, இருந்தபோதும், சர்வதேச நீதிமன்றத்துடன் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உள்நாட்டு விசாரணையும் அனுமதிக்கப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
“இந்த புதிய கட்டத்தில், கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு நம்முடைய வேலையை செய்யத் தொடங்குவோம். அப்போது, நீதி நிச்சயம் வெல்லும் என்று உறுதியளிக்கிறேன்” என்று மதுரோ கூறியுள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதிவி நீக்கம் செய்யும் நோக்கத்தில், அமெரிக்க அரசு வெனிசூலா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை, லட்சக்கணக்கான வெனிசூலா மக்களை பட்டினியில் தள்ளியுள்ளதாகவும், ஆகவே அமெரிக்காவுக்கு எதிராக இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு வெனிசூலா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்றக்கொள்ளப்படாத நிலையில், தற்போது வெனிசூலாவுக்கு எதிராக விசாரணை தொடங்கப்படவுள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
Source: AP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.