கர்நாடகாவின் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கல்வி வளாகங்களில் மத ரீதியான ஆடைகளை அணிவதற்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (பிப்பிரவரி 10) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறியதையடுத்து பிற கல்லூரிகளிலும் ஹிஜாப் தடை கொண்டுவரப்பட்டது. மேலும் ஹிஜாப்க்கு எதிராக காவி துண்டு அணிந்து மாணவர்கள் போராடியதும், அதில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து கர்நாடகாவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
ஹிஜாப்புக்கு தடை: ‘மாணவர்களின் மதம் சார்ந்த ஆடையை அனுமதிக்க முடியாது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்
ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மாணவி ஒருவர் தாக்கல் செய்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகிறது என்றும், அப்போது ஹிஜாப் தடையால் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜாப் அணிவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, தனியுரிமை, மனசாட்சியின் சுதந்திரம் ஆகியவற்றிற்கு உட்பட்டது என்றும், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு இந்திய அரசியலமைப்பை மீறும் செயல் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகள் நுழைய முடியாது என்ற கர்நாடக அரசின் உத்தரவு இஸ்லாமிய மாணவிகள், பிற மத மாணவிகள் என்ற நியாயமற்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. இது மதச்சார்பின்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19, 21 மற்றும் 25 ஆகிய பிரிவுகளை முற்றிலும் மீறும் செயலாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்
இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் வலியுறுத்தினார். அப்போது, தலைமை நீதிபதி என்வி ரமணா, “இதுபோன்ற விஷயங்களை தேசிய அளவில் பரப்ப முயற்சிக்க வேண்டும். நாங்கள் சரியான தருணத்தில் தலையிடுவோம்” என்றார். அதற்கு வழக்கறிஞர், “மாணவிகள் 10 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இந்த விவகாரம் பரந்துபட்ட வீச்சைக் கொண்டுள்ளது. அதனால் விசாரிக்க வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதி ரமணா, “இதை பெரிதாக்க முயற்சிக்க வேண்டாம். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். இந்த விஷயத்தை தேசிய அளவில் பெரிதாக்கி டெல்லிக்குக் கொண்டுவர வேண்டுமா என்று யோசியுங்கள். ஏதேனும் தவறு நடந்தால். அப்போது நாங்கள் நீதியைக் காப்போம்” என்று பதிலளித்தார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.