Aran Sei

தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்

வர்கள் தொழிலாளர்கள். ஆனால் முறையான “வேலைவாய்ப்பு” இல்லாதவர்கள். அவர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் வேலை(job)இல்லை. அவர்கள்  சொமேடோ (Zomato) அல்லது ஸ்விக்கி (Swiggy) டி-சர்ட்டுகள் மற்றும் தொப்பிகள் அணியலாம். ஆனால் அவர்கள் இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் அல்ல. இந்த நிறுவனங்களும் அவர்களின் முதலாளிகளும் அல்ல. சிலர் தங்களுடைய வண்டிகளை சொந்தமாக வைத்திருக்கலாம் ஆனால் ஓலா மற்றும் ஊபெர் போன்ற டாக்ஸி ஒருங்கிணைப்பாளர்களுக்கு(aggregators) அதிக தரகு (கமிஷன்) கொடுக்கிறார்கள். ஏனெனில் பயணிகள் இந்த ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அவற்றை வாடகைக்கு எடுப்பார்கள். அவர்களுக்கு ஒரு புதிய பெயர் உள்ளது – அவர்கள் முறைசாரா (gig workers ) தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முறைசாரா (gig workers ) தொழிலாளர்கள் ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்து வாழ்கின்றனர். ஆயினும்கூட, கொரானா தொற்று நோயின்போது இந்த வகைத் தொழிலாளர்கள் அதிகபட்ச வேலைவாய்ப்பு விரிவாக்கத்தைக் கண்டனர்.

OLA, UBER ஐ புறக்கணித்து புதிய செயலியை உருவாக்கிய தொழிற்சங்கம் – கார்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுனர்கள்

சொமேடோ (Zomato) விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சொமேட்டோ ஹைப்பர்(Zomato  Hyperpure)உடன் 486 உணவகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 2,256 ஆக நான்கு மடங்குகள் அதிகரித்தது. இது தொற்றுநோய் தொடங்கிய ஆண்டாக இருந்தது. மீண்டும் உச்ச தொற்றுநோய் ஆண்டான 2020–21-இல் 9,225 ஆக மேலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது..

பிலிப்கார்ட், ஸ்னாப்டீல், மைந்த்ரா (Flipkart, Snapdeal and Myntra) ஆகியவை 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் இணைய வணிகத்தை அறிமுகப்படுத்தின. இருப்பினும், இணைய  வர்த்தகம் சில்லறை வணிகத்தில் ஓரளவுக்கு இருந்தது. 2013ஆம் ஆண்டில் அமேசான் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இணைய வணிகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. சொமேடோ 2008இல் குர்காவோனில் இணைய வழி ஆர்டர்கள்(online orders) உணவு விநியோகத்தில் ஒரு சாதாரண தொடக்கத்தை உருவாக்கியது. ஸ்விக்கி 2014இல் பெங்களூரில் தொடங்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம் தொழிலாளர்கள், விளையாட்டு (ஸ்போர்ட்டிங்) நிறுவனங்களின் முத்திரைப் பதிந்த (பிராண்டட் ) டி-ஷர்ட்டுகளுடன் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான நகர்ப்புற நிலப்பரப்புகளைக் கடக்கத் தொடங்கினர். அவர்கள் சிறு சாதனங்கள் முதல் மளிகைப் பொருட்கள்வரை மற்றும் நவநாகரிக உடைகள் முதல் உணவு வரை அனைத்தையும் வழங்கினர். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மில்லியனுக்கும் குறைவாகவே இருந்தனர். இப்போது அவர்கள் எண்ணிக்கை 8 மில்லியன். இந்த விரிவாக்கத்தின் பெரும்பகுதி தொற்றுநோய் ஆண்டுகளில் நடந்தது.

பாஸ்டன் கன்சல்டிங் குழு அறிக்கையானது அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 மில்லியனில் இருந்து 24 மில்லியனாக அதிகரிக்கும் என்று கடந்தாண்டில் கூறியது. 9 -10 ஆண்டுகளில் மொத்த முறைசாரா வேலைகளின் எண்ணிக்கை 90 மில்லியனாக உயரும். ஒப்பிடுகையில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்று 4.5 மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள், அடுத்த பத்து ஆண்டுகளில் இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் புதிய முறைசாரா தொழிலாளர்கள் துறையானது குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளின் பரவலாக்கத்தை பிரதிபலிக்கிறது. தகவல் தொழிற்நுட்பத் துறையானது இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் முறைசாரா  பொருளாதாரம் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

தொழிலாளர்களின் தேவை அதிகமாக இருக்கும்போது அவர்களின் ஊதியம் உயரும் என்று பொருளாதாரக் கோட்பாடு கூறுகிறது. ஆனால் முரண்பாடாக தொற்றுநோய்களின் காலக்கட்டத்தில் முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகியபோதும் அவர்களின் வருவாய் மற்றும் சேவை நிலைமைகள் கடுமையாகச் சரிந்தன.

பெங்களூரூவில் ஹுசைனியின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உணவு விநியோக நிறுவனமான சொமேடோ  (Zomato) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தொற்றுநோய்க்கு முன் அவர் ஒரு நாளைக்கு 22-23 விநியோகங்களைச் (டெலிவரி)  செய்து கொண்டிருந்தார், ஒவ்வொரு விநியோகத்திற்கும் அவருக்கு ரூ.25 கிடைத்தது. தொற்றுநோய்களின்போது பரவலான வேலை இழப்புகளின் பின்னணியில் விநியோக (டெலிவரி)  வேலைக்குச் சென்ற புதிய தொழிலாளர்களின் பெரிய எண்ணிக்கையினால் அவர் செய்யக்கூடிய விநியோகங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7 அல்லது 8 ஆகக் குறைந்தது. பின்னர் அது 11 அல்லது 12 ஆக மட்டுமே முன்னேறியது. சிறிது காலம் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கூட விநியோக  வேலைக்குச் செல்லும் வினோதமான நிகழ்வை பெங்களூரு கண்டது.

பணி நிலைமைகளில் இத்தகைய தொற்றுநோயால் உந்தப்பட்ட சீரழிவை எதிர்கொள்வதில் ஹுசைனி மட்டும் இல்லை. கிழக்கு டெல்லியில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்த அனில், அவர் செய்யக்கூடிய விநியோகங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து 12 அல்லது 13 ஆக மட்டுமே இருந்தது என்று தெரிவித்தார். ஒவ்வொரு 5 விநியோகத்திற்குப் பிறகும் ரூ.60 ஊக்கத்தொகையாக இருந்தது; இப்போதெல்லாம் ஊக்கத்தொகையாக ரூ.180 கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஹுசைனி இப்போது சொமேடோவில் தனது வேலையை விட்டுவிட்டு இணைய வழி மருந்து ஆர்டர்களை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில் ஸ்விக்கியை விட்டு வெளியேறிய அனில் ஒரு சிறிய உணவு விநியோக நிறுவனத்தில் சேர்ந்துள்ளார், அங்கு அவருக்குத் தொல்லைகள் குறைவாக இருப்பதாக உணர்கிறார்.

‘உங்கள் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுங்கள்’ – சமூகச் செயற்பாட்டாளர் காஞ்சன் நானாவேரின் கடைசி நிமிடங்கள்

ஹுசைனி, அனில் ஆகிய இருவரும் கோவிட் ரெஸ்பான்ஸ் வாட்சிடம்(COVID  Response Watch) தினசரி பெட்ரோல் தேவைகளுக்கு தங்கள் சொந்த பைகளில் இருந்து செலவழிப்பதைத் தவிர தங்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு மாதாந்திர தவணைப் பணத்தைச் (EMI) செலுத்த வேண்டும் என்று கூறினர். பெட்ரோலுக்குச் செலவு செய்த பிறகு அவர்களின் மாத வருமானம் ரூ. 10,000. பெங்களூரு அல்லது டெல்லி போன்ற அதிக செலவுமிக்க நகரங்களில் அந்த வகையான வருமானத்துடன் வாழ்வது மிகவும் கடினம். ஹுசைனி ஆரம்பத்தில் பெங்களூருவின் ஜெயநகர் பகுதியைச் சுற்றி 3-5 கிமீ எல்லைக்குள் உணவுப் பொட்டலங்களை வழங்க வேண்டியிருந்தது. ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு தகவல் தொழில் நிறுவன ஆர்டர்கள் குறைவாக இருந்ததால் தொலைதூர மல்லேஸ்வரத்தில் உள்ள வீடுகளுக்கு உணவு வழங்க கூடுதலாக 14 அல்லது 15 கிமீ பயணம் செய்ய வேண்டியிருந்தது என்றார்.

டெல்லியில் உள்ள மற்றொரு உணவு விநியோகத் தொழிலாளியான ஹர்ஷ், சேவை நிலைமைகளின் வீழ்ச்சிக்கு வேறு விளக்கம் அளித்துள்ளார். அவர் கோவிட் ரெஸ்பான்ஸ் வாட்சிடம் கூறியதாவது: “ஆரம்பத்தில் கொரானா தொற்றின் முழு அடைப்பின்போது உணவகங்களில் உள் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் உணவு விநியோகத் தொழிலாளர்கள் வீட்டிலேயே உணவை விநியோகிக்க அனுமதிக்கப்பட்டனர். முழு அடைப்பில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் மாணவர்கள் உணவு விநியோக நிறுவனங்கள் மூலம் உணவை ஆர்டர் செய்ய முனைந்தனர். எனவே இந்த நிறுவனங்களால் அதிக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். டெல்லியில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் கூட மூடப்பட்டதால் விநியோக வேலைகள் அதிகமாக இருந்தன. ஆனால் அது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஒட்டுமொத்தமாக கொரானா தொற்றுநோய் மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் நோய்த்தொற்றுக்கு பயந்து பல வாடிக்கையாளர்கள் வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டனர்” என்றார்.

தொழிலாளர் மீது ஏவப்படும் அதிகமான தவறான அணுகுமுறை

தொற்றுநோய்களின் காலகட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் முக்கிய புகார் அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பற்றியது. அவர்கள் மீது ஏவப்படும் தவறான அணுகுமுறைகளால் பல முனைகளில் துன்புறுத்தப்படுகின்றனர். தொழிலாளர் ஹர்ஷ் கூறும்போது: “அழைப்பை ஏற்று நீண்ட நேரம் காத்திருந்த பிறகு வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்திலிருந்து உணவை எடுத்து நொய்டாவில் உள்ள ஒரு வீட்டிற்கு விநியோகம் செய்ய எங்களுக்கு ஒரு விநியோக ஆர்டர் ஒதுக்கப்பட்டது. மொத்தப் பயணம் சுமார் 10 கிலோமீட்டர் தூரமாகும். அதை அரை மணி நேரத்தில் முடித்திருக்கலாம். ஆனால் உணவகங்களில் தேவையற்ற காலதாமதம் இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வெளியேறுதல் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அடிக்கடி ஒரு மணி நேரம் காத்திருந்து பொட்டலங்களை எடுக்க வேண்டியிருந்தது. தாமதத்திற்கு வாடிக்கையாளர் எங்களைக் கடுமையாகக் கடிந்து கொள்வார். சக்திவாய்ந்த பன்னாட்டு உணவு விநியோகச் சங்கிலி உணவகங்களுக்கு எதிராக எங்கள் நிலையோ சக்தியற்றவை. உங்களின் ’மதிப்பீடு புள்ளிகளைக் குறைப்பேன்’ என்று மிரட்டுவதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்காக கண்காணிப்பாளர்கள் எங்களைத் துன்புறுத்துவார்கள் என்றார்.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

தங்கள் இரு சக்கர வாகனங்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்புக்கான ஜிபிஎஸ் அமைப்புகள் இல்லை என்றாலும் தொழிலாளியின் சரியான இடத்தை நிறுவனம் கண்டறியக்கூடிய சில செயலிகளை தங்கள் ஸ்மார்ட் போன்களில் நிறுவுமாறு நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியதாக ஹுசைனி கூறினார். சென்னையில் ஒரு தொழிலாளி கூறும்போது “எத்தனையோ மக்களின் பசியை போக்க உணவு விநியோகம் செய்தாலும் நாங்களே அடிக்கடி பட்டினியால் வாடுகிறோம். உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு மற்றும் தேநீர் இலவசம். ஆனால், விநியோகம்  செய்யும் தொழிலாளிகளான  எங்களுக்கு உணவு அல்லது ஒரு கோப்பை தேநீரோ கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. வேலையில் இருக்கும்போது வழியில் ஏதாவது உணவு விடுதியைக் கண்டுபிடித்து எங்கள் சொந்தப் பையில் இருந்து பணம் செலுத்தி எதையாவது விரைவாகக் கவ்வி அடுத்த விநியோகத்திற்கு மீண்டும் விரைவோம். சில நிமிடங்கள் கழிவறைக்குச் செல்வதற்காக நாங்கள் எங்கள் வீட்டிற்குள் சென்றாலும் குறிப்பிட்ட விநியோகத்திற்கும் அடுத்த விநியோகத்திற்கும் இடையில் நாங்கள் எங்கிருந்தோம் என்பதை விளக்குமாறு கேட்கப்படுவோம். எங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படும்” என்றார்.

“தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறைகளில் பணிபுரியும் எங்கள் நண்பர்கள் ஆண்டு ஊதியம் மற்றும் திருவிழா வெகுமதி பெறுவதைப் பார்க்கும்போது நாங்கள் இழந்ததாக உணர்கிறோம். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு விநியோகத்திற்கு ரூ.25 கிடைத்தது. இன்றும் எனக்கு அதே தொகை கிடைக்கிறது. பண்டிகைகளுக்கு எதுவும் கிடைக்காது, ஒரு இனிப்பு பொட்டலம்கூட கிடைக்காது. தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் அல்லது ஈத் நாட்களில் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால் 5 விநியோகத்திற்குப் பிறகு ஊக்கத்தொகை ரூ.60 இல் இருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டு தடையின்றி தொழிலாளர் வழங்கலை உறுதி செய்கிறது. பண்டிகை நாட்களில் ஆர்டர்கள் அதிகமாக இருக்கும்பொழுது நாங்கள் வேலைக்கு வரத் தவறினால் நாங்கள் அதற்கான விலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம், ”என்று ஒரு இணைய வணிகப் பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர் புலம்பினார். தொழில்நுட்பச் சகாப்தத்தின் காலத்து வேலை உண்மையில் பலவீனமாகவும்.இருக்க முடியும்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய நிலை என்ன? நிறுவனங்களால் தங்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் துப்புரவு சாதனங்கள் வழங்கப்பட்டதாக ஹர்ஷ் கூறுகிறார். “ஆனால் அவர்கள் நாங்கள் மருத்துவ பரிசோதனை சோதனை செய்து கொள்ள உதவவில்லை. எங்கள் சொந்த செலவில் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும், தடுப்பூசி போடவும் நிர்ப்பந்திக்கப்பட்டோம். உணவுப் பொட்டலங்களுக்கு நீர் புகாத உறை கொடுக்கிறார்கள் ஆனால் மனிதர்களாகிய எங்களுக்கு மழை கோட் (ரெயின் கோட்) கிடைப்பதில்லை. ரூ.1500 கொடுத்தால்தான் காவல்துறையின் தொல்லையிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ள மழை கோட் மற்றும் நிறுவனத்தின் சின்னம் (கம்பெனி லோகோ) உள்ள இரண்டு டி-சர்ட்கள் வழங்கப்படும்” என்கிறார்.

“விநியோகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மேலும் மேலும் சம்பாதிக்க அடிக்கடி அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டுகிறோம். எங்களுக்கு ‘அத்தியாவசியத் தொழிலாளர்கள்’ என்று குறியிடப்படாததால் விபத்துகளில் மரணம் ஏற்பட்டால் அரசிடமிருந்து இழப்பீடு கிடைப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த விபத்தில் ஸ்விக்கி தொழிலாளி ஒருவர் காலை இழந்தார். நிறுவனம் விபத்திற்கோ வேலையில்லாமல் இருந்த நாட்களிலோ அவருக்கு இழப்பீடு வழங்கவில்லை. நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம்; விநியோக தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் உடல்நலக் காப்பீட்டை  வழங்க ஸ்விக்கியை கட்டாயப்படுத்தினோம். இப்போது எங்களுக்கு ரூ.4 லட்சம் வரை காப்பீடு உள்ளது. தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கவும் சொமேடோ ஒப்புக்கொண்டது. ஆனால் பல சிறிய நிறுவனங்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்தப் பெருநிறுவனங்கள்கள்  கூட அனைத்து நகரங்களிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு வழங்குவதில்லை”என்று அவர் மேலும் கூறினார்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

திடீர் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும்

குர்காவோனில் உள்ள நகர்ப்புற வாணிகச் சங்கம் (அர்பன் கிளாப் என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற சில நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான முறைசாரா பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சிகை அலங்காரம் மற்றும் பிற அழகு சேவைகள், சமையலறை உதவி போன்ற பணிகளைச் செய்ய வீடுகளில் இருந்து வரும் முறைசாரா அழைப்புகளைச் (gig calls) செயற்படுத்துகிறார்கள். இத்தகையோர் பாத்திரம் கழுவுதல், குளியலறையை சுத்தம் செய்தல் மற்றும் சலவை இயந்திரங்களை இயக்குதல், குழந்தைகள் காப்பகம் மற்றும் வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்களுக்கான பராமரிப்பு வேலைகள் மற்றும் தொற்றுநோய்களின் போது வழக்கமான வீட்டுப் பணியாளர்கள் வருவதை நிறுத்தும்போதும் வேலை செய்கிறார்கள். 2021 டிசம்பரில் இந்த நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களில் சிலர் தமது பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாதுகாப்பு இல்லாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர் தரநிலைமைகளே இல்லாததால் அரசாங்கத்தால் சேவை நிலைமைகளை ஒழுங்குபடுத்துவது இயலவில்லை. எனவே அமலாக்கத்தின் கேள்வி எங்கே? முறைசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து கோரி பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது. இன்னமும் அறிவிக்கப்படாத சமூகப் பாதுகாப்பு குறித்த தொழிலாளர் சட்டத் தொகுப்பானது தற்போதைய  காப்பீட்டுத் திட்டங்களின் அற்பமான வடிவத்தில் மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பை முன்மொழிகிறது. இணைய வணிகப் பெருநிறுவனங்கள் குறிப்பிட்டளவு குறைந்தபட்ச மேல் வரி(cess)செலுத்த ஒப்புக்கொண்ட பிறகு அவர்களுக்கு சில காப்பீடுகளை வழங்க அரசாங்கத்துடன் வற்புறுத்தியுள்ளன. ஆனால் மற்ற அனைத்து தொழிலாளர் உரிமைகளுக்கும் உரிமையுள்ள தொழிலாளர்கள் என தம்மை சட்டப்பூர்வ அந்தஸ்தாக அறிவிப்பதைத் தடுக்க அரசாங்கத்தின் மீது செல்வாக்கைச் செலுத்தியுள்ளன.

மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி

உழைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பிரிவு ஒன்றுக்கு தொழிலாளர்கள் என்ற அந்தஸ்து கூட மறுக்கப்பட்டு அதன் விளைவாக அதனுடன் தொடர்புடைய தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொற்றுநோய் நிவாரணமும் மறுக்கப்படுவதானது ஆகியவை ஒளிரும் இந்தியாவின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துகின்றது!

countercurrents இதழில் வெளியான கட்டுரை

எழுதியவர்: பி.சிவராமன், எழுத்தாளர்

தமிழில்: தேவராஜன்

Annamalai Srilanka Trip ஒரு மிகப்பெரிய காமெடி | Trichy Velusamy

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்