Aran Sei

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் – குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்

HuffPost India

2016-ம் ஆண்டு, நவம்பர் 8 அன்று, இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. கடுமையான இந்தக் கொள்கை முடிவால் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் மதிப்பிழந்தன. ஒரே இரவில், இந்தியாவின் 86% ரூபாய் தாள்கள் பயனற்றதாக மாறின.

இதுகுறித்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த நடவடிக்கையால் மனித வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது. பொருளாதார வல்லுநர்களான ஜீன் ட்ரூஸ், ஆஷிஷ் குப்தா, சாய் அங்கித் பராஷர் மற்றும் கனிகா சர்மா ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை, “2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில், இந்தியாவின் பெரும் பகுதிகளில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது” என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளது.

2016-ம் ஆண்டு வரை, இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சரிந்துவந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில் திடீர்ப் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டுள்ளனர்.

திடீர் மாற்றம்

குழந்தை இறப்பு விகிதம் ஒவ்வொரு 1,000 பிறப்புகளிலும் முதல் வயதை அடைவதற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அளவிடுகிறது. இது மனித வளர்ச்சியின் மிக முக்கியமான கணக்கெடுப்பில் ஒன்றாகும்.

இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகமாகும். இந்த எண்ணிக்கை 2005 முதல் 2016 வரை வேகமாகக் குறைந்துவந்தது. “2005 மற்றும் 2016 க்கு இடையில், ஒட்டுமொத்த குழந்தை இறப்பின் வருடாந்திர வீழ்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.8% ஆக இருந்தது. இது 1990-2005 ஆம் ஆண்டுக்கு இடையில் 2.1% ஆகவும் மற்றும் 1971-1990 ஆம் ஆண்டுக்கு இடையில் 2.6% ஆகவும் இருந்தது” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெற்றிக்கு விரைவான பொருளாதார வளர்ச்சியும் நலத்திட்டங்களும்தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தச் சரிவு 2016-ல் குறைந்துள்ளது.

பதினைந்து ஆண்டுக்கால போக்கை உடைத்து, குழந்தை இறப்பு வீழ்ச்சியின் வேகம் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளது. 2005 – 2016-ம் ஆண்டிற்கான 4.8% உடன் ஒப்பிடும்போது, அகில இந்தியக் குழந்தை இறப்பு விகிதம் 2017-ல் 2.9% ஆகவும் மற்றும் 2018-ல் 3.1% ஆகவும் குறைந்துள்ளது.

தரவுகளை ஆழ்ந்து நோக்குவது இன்னும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

2017-ம் ஆண்டில் இந்தியாவின் 20 பெரிய மாநிலங்களில் 8 மாநிலங்களில் குழந்தைகளின் இறப்பு வீழ்ச்சி குறைந்தது. இந்த விகிதத்தில், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தேக்கமும், அதே நேரத்தில் கர்நாடகாவில் அதிகரிப்பும் காணப்பட்டது.

2018-ம் ஆண்டில், குழந்தை இறப்பு விகிதம் இரண்டு மாநிலங்களில் தேக்கம் அடைந்தது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிகரித்தது.

குழந்தைகளின் ஆரோக்கிய முன்னேற்றத்தில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவு, இந்தியாவின் சமீபத்திய காலங்களில் எதிர்பார்க்கப்படாதது என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 அல்லது 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்த குழந்தை இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்த மாநிலங்கள், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 56.4% கொண்டுள்ளன.

குழந்தை இறப்பு விகித அதிகரிப்பு, முதலில் நகர்ப்புறங்களைப் பாதித்துள்ளது. பின்னர் கிராமப்புறங்களைப் பாதித்துள்ளது.

இந்தப் பாதிப்பு மட்டுமல்லாமல், 2014 -15 மற்றும் 2018 -19 க்கு இடையில் கிராமப்புறங்களில் வாங்கும் திறன் தேக்க நிலையில் இருந்தது என்பதும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்தாலும் கொரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. “கொரோனா பொதுமுடக்கம் வேலையின்மைக்கு வழிவகுத்தது. பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை நோய்த்தடுப்பு உள்ளிட்ட பொதுச் சுகாதார சேவைகளில் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது” என இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்