Aran Sei

“இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – திக்விஜய் சிங்; ”தேச பக்தர்களை அவமதிக்கும் காங்கிரஸ்” – பிரக்யா சிங்

credits : pti

நாதுராம் கோட்சேவை அவமதித்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங்கிற்கு, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதியன்று, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயரில், நூலகத்துடன் கூடிய கல்வி நிலையத்தை மத்தியப் பிரதேச மாநில இந்து மகாசபை தொடங்கியிருந்தது.

இதுகுறித்து, இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் ஒருவர், “இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து, இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதும் விழிப்புணர்வை பரப்புவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும். இங்கு மகாராணா பிரதாப் போன்ற வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.” என்று கூறியிருந்தார்.

மேலும் “1947 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. ஆகவே, வரும் தலைமுறையினருக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறு தெரியும்படி செய்யவேண்டும். அவ்வகையில் ‘நாதுராம் கோட்சே கியான்ஷாலா’ கல்வி நிலையம், இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி, இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கும். அதற்கான நூலகமாகவும் இந்நிலையம் விளங்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் பெயர், கல்வி நிலையத்திற்கு சூட்டப்பட்டிருந்ததால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கல்வி நிலையத்தை மூட குவாலியர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்து மகாசபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கூடுதல் மாவட்ட நீதிபதி கிஷோர் கன்யால், “இந்தப் பகுதியின் அமைதியை கெடுக்கும் எந்த செயலுக்கும் அனுமதியளிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார். ”சட்டத்தை மீறி எதையும் செய்ய மாட்டோம்” என்று கூறிய இந்து மகாசபை உறுப்பினர்கள் கல்விநிலையத்தை மூடி விடுவதாக தெரிவித்திருந்தனர்.

கோட்சே பெயரில் கல்விநிலையகத்துடன் கூடிய நூலகத்தை திறந்த இந்து மகாசபைக்கு  கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங், “தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே தான் முதல் தீவிரவாதி” என தெரிவித்திருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், திக் விஜய சிங்கின் இந்த கருத்து தொடார்பாக, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அவர், “தேச பக்தர்களை எப்போதும் காங்கிரஸ் அவமதித்தே வந்துள்ளது. காவி தீவிரவாதம் என்று கூறுகின்றனர், இதை விட கொடுமை என்ன இருக்க முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்