Aran Sei

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேபாளம் விரையும் இந்தியர்கள்: இந்தியாவின் பற்றாக்குறை காரணமா?

சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள, அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியர்கள் செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், ருஷ்யாவின் ஸ்புட்நிக்  தடுப்பூசியைப் பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், நேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கக் கால தாமதமாவதால், அந்நாட்டுக்கு சீனா அளித்த வெரோ செல் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘இது ஒரு போர் சூழல்; கொரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்’ – மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

இந்நிலையில், சென்ற வாரம், நேபாள் நாட்டு தலைநகரில் இருக்கும் டாகு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெரிய பயணப் பைகளோடு சிலர் வந்துள்ளனர் என்றும் அவர்களிடம் அடையாள அட்டைகளைக் காண்பிக்கும்படி மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது, அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை காட்டினார்கள் என்றும் அம்மருத்துவமனையின் ஊழியர்கள் கூறியுள்ளதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாது என நாங்கள் கூறினோம். ஆனால், அதற்கு அவர்கள் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பலரும் பலவிதத்தில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.” என்று அம்மருத்துவமனை இயக்குநர் சாகர் ராஜ் பண்டாரி பிபிசி நேபாளிடம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கொரோனாவால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்பலிகள்; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

நேபாளத்திற்கான சீன தூதரகத்தின் வலைதளத்தில், இந்தியாவிற்கான சீன தூதரக வலைதளத்திலும், சீனாவில் தயாரான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவில் நுழைய விசா அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக பேசிய நேபாள சுகாதாரத் துறை இணை செய்தித் தொடர்பாளர் மருத்துவர் சமிர் குமார், “முதலில் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மக்களிடம் கூறினோம். தற்போது எழுத்துபூர்வமாகவும், கட்டாயமாகவும் அடையாள அட்டைகளைச் சரி பார்க்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்று கூறியுள்ளதாக பிபிசி தமிழ் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி, மற்றும் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசை மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்