ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சிவில் சமூக உறுப்பினர்கள் குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான இந்திய இஸ்லாமியர்கள் (ஐஎம்எஸ்டி) என்ற அமைப்பில் கீழ் கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் மற்றும் நடிகர் நசிருதீன் ஷா உட்பட 278 பேர் கையெழுத்திட்ட அறிக்கையில், இந்திய இஸ்லாமியர்கள்மீது இனப்படுகொலையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் குரல்கள் எழுந்துள்ள நிலையிலும், பிரதமர் மோடி காத்துவரும் மௌனத்தைக் கண்டு எந்த இந்தியரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.
பெண்களை அவதூறு செய்த வழக்கு – சாமியார் யதி நரசிங்கானந்தை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
“பிரதமரின் மௌனம், இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலுக்கு சற்றும் குறைவானது அல்ல. அவரது மௌனம் மன்னிக்க முடியாதது. பிரதமர் மோடி தனது முதல் பதவி காலத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (அனைவருடைய ஆதரவு, அனைவருடைய வளர்ச்சி) என வாக்குறுதி அளித்தார். தற்போதைய இரண்டாவது பதவிக்காலத்தில் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ (அனைவருடைய ஆதரவு, அனைவருடைய வளர்ச்சி, அணைவருடைய நம்பிக்கை) என்ற முழக்கத்துடன் அவர் ஒரு படி மேலே சென்றிருக்கிறார்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதும் அடித்து கொல்லப்படுவதும் தொடர்கதை ஆகிப்போன இச்சூழலில், இம்முழக்கங்கள் நேர்மையற்ற, வெற்று முழக்கங்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான இந்திய இஸ்லாமியர்கள் அமைப்பு கூறியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான இந்திய இஸ்லாமியர்கள் அமைப்பினுடைய அறிக்கையில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தரம் சன்சாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.