Aran Sei

`இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுள்ளது’ – நிர்மலா சீதாராமன்

Image Credits: The Indian Express

தொழிற்துறைக்கு ஊக்கத் திட்டங்களை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் ”இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 4.89 லட்சமாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நீண்டகால கடுமையான ஊரடங்குக்குப் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தூண்டியுள்ளது. அதையொட்டி, மக்களால் மேற்கொள்ளப்படும் பெரும்-பொருளாதாரக் கொள்கைகளும் பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்லும் முக்கியக் காரணி” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் “எரிசக்தி நுகர்வு வளர்ச்சி அக்டோபரில் ஆண்டுக்கு 12 சதவீதமாக உயர்ந்தது. நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தினசரி சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் எடை அளவு 12 சதவீதத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) வருவாய் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி, கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020-21-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்குத் திரும்புவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக மட்டுமல்ல; வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் இந்தப் பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளதாக முக்கியப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்து முக்கிய துறைகளுக்கான, உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கம் (பிஎல்ஐ) திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இதே போன்ற திட்டம் மூன்று துறைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

“எனவே இப்போது, ​​13 துறைகள் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் இந்தியாவை இணைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்