Aran Sei

இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

ந்திய ராணுவத்திற்காக கையெறி குண்டுகளை தயாரித்துள்ள சோலார் இண்ட்ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் டெட்டனேட்டர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டுவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பார் (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், நாக்பூரை சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்திற்கு நேற்று (24.08.21) வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை தயாரித்து வழங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் அக்டோபர் 1, 2020 ஆம் தேதி மோடி அரசு ஏற்படுத்திக் கொண்ட ரூ.409 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கையெறி குண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாகேத் கோகலே, சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டெட்டனேட்டர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு அவர் வெளியிட்டிருந்த பதிவில், 2016 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு விட்டுச் சென்ற ஆயுதங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியதுடன், அந்த அறிக்கையையும் பகிர்ந்துள்ளார்.

”சிரியாவின் கோபேன் பகுதியில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு விட்டுச் சென்ற ஆயுதங்கள், இந்தியாவின் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை குர்திஷ் படைகள் கண்டறிந்துள்ளது என்றும், துருக்கி மற்றும் லெபனான் நாடுகளில் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் இந்த ஆயுதங்கள் சிரியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று சாகேத் கோகலே தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையின் அடிப்படையில், சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தாமல், அவர்களுக்கு இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை தயாரிக்கும் ஒப்பந்தகளை வழங்கியது ஏன் என கோகலே டிவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் பாஜக அரசு ஆட்சியில் இருந்த சமயம், சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், இந்திய ராணுவத்திற்கு தோட்டாக்கள் தயாரிக்க 1550 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள சாகேத் கோகலே, இந்த நிறுனத்துடன் நாக்பூரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் நெருக்கமாக இருந்ததை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏன் விசாரிக்கவில்லை எனறும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குறித்து 2016ஆம் ஆண்டே ஐரோப்பிய யூனியனின் அறிக்கை வெளியான பிறகும், இந்திய ராணுவத்திற்கு வெடிபொருட்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஏன் என்றும் சாகேத் கோகலே தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளரான சாகேத் கோகலே, இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்