Aran Sei

‘பொது காப்பீடு திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புங்கள்’ – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தள கட்சிகள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது காப்பீடு திருத்த மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

அரசு பொது காப்பீடு நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்பளிக்கும் இந்த மசோதா மீதான விவாதம் இன்று (11.08.2021) நடைபெற இருக்கிறது.

பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பின்னர், எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அரசு நேற்று மதியம் 3 மணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. கூட்டத்தில் பேசிய ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி, மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தற்கு மாறாக மசோதா இருப்பதாக குற்றம்சாட்டிய விஜய் சாய் ரெட்டி, “2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தைத் தனியார்மயமாக்க இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மசோதா நான்கு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

”தனியாருக்கு 51% பங்குகளை விற்க அனுமதியளிப்பதன் மூலம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தனியாருக்கு வழங்குவதை மசோதா முன்மொழிகிறது. இது நிதியமைச்சர் முன்மொழிந்தது அல்ல” என கூறினார்.

நாடாளுமன்ற தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்திய பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரசன்னா ஆச்சரியா, “காப்பீட்டு மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பபட்ட பிறகே நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் (அரசாங்கம்) அதை ஏற்கவில்லை. இந்த மசோதாவை அவையில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். கருத்து வேறுபாடுடன் கூட்டம் முடிவடைந்தது” என தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக எந்த நிலைபாடுகளையும் எடுக்காமல் பெரும்பாலான விசயங்களில் நடுநிலை வகித்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகளை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், மசோதாவுற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்