Aran Sei

“மன்னிப்பு கேட்க முடியாது (போடா)” – நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா

Credits Livelaw

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஒதுக்கப்போகும் நேரத்தை, பிற முக்கிய மனுக்குளை விசாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று நடிகர் குனால் கம்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை விமர்சித்து, உச்ச நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக் கொடி பறப்பது போலவும் உச்ச நீதிமன்றம் காவி நிறத்தில் இருப்பது போலவும் நடிகர் குனால் கம்ரா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், குனால் கம்ராவின் பதிவுகள் உச்ச நீதிமன்றத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், “மன்னிப்பு கேட்க முடியாது, அபராதம் செலுத்த முடியாது, தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.” என்று குனால் கம்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், “உச்ச நீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக, ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக நான் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்களில் கூறியிருந்தேன். அந்த ட்வீட்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகின்றன.” என்றும் “என்னுடைய ட்வீட்களில் நான் வெளிப்படுத்தியுள்ள கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. அந்த பதிவுகளை நீக்கவோ அல்லது அதற்காக மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது தொடர்பாக என் மீது போடப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க ஒதுக்கும் நேரத்தை பிற முக்கிய வழக்குகளுக்கு அளிக்க விரும்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

“நேரத்தையும், கவனத்தையும் பெற வேண்டிய, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான மனு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றது தொடர்பான மனு உள்ளிட்ட பிற அவசியமான விசாரணைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.” என்று சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “உச்ச நீதிமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக ஹரிஷ் சால்வே படத்தை வைக்க வேண்டும் என முன்னர் கூறியிருந்தேன். அதே போல, நேருவின் படத்துக்கு பதில் மகேஷ் ஜெத்மலானி படத்தை வைக்க வேண்டும்.” எனவும் குனால் கம்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்