Aran Sei

பாலியல் வழக்கைப் பதிவு செய்ய 800 கி.மீ பயணித்த இளம் பெண்

Image Credits: The Quint

22 வயதான நேபாளப் பெண் ஒருவர் லக்னோவிலிருந்து மகாராஷ்டிராவின் நாக்பூருக்குச் சென்று பாலியல் வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

உத்தர பிரதேசத் தலைநகரான லக்னோவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தக் குற்றம் தொடர்பாகக் காவல்துறையினரை அணுகக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்பெண்ணை அச்சுறுத்தியதால், அவர் அங்கிருந்து தப்பி ஓடி, லக்னோவிலிருந்து 800 கிமீ தூரத்தில் உள்ள நாக்பூரை அடைந்துள்ளார், என்று என்டிடிவியில் செய்தி வெளியாகியுள்ளது.

அவர் நாக்பூரில் உள்ள ஒரு நண்பரை நாடி வந்துள்ளார். அந்த நண்பர் இப்பெண்ணுக்கு ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய உதவியுள்ளார் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஜீரோ எஃப்ஐஆரை (முதல் தகவல் அறிக்கை) எந்தவொரு காவல் நிலையத்திலும் தாக்கல் செய்யலாம். பின்னர் அதனை அதிகார எல்லைக்குள் இருக்கும் பொருத்தமான காவல் நிலையத்திற்கு மாற்றலாம்.

அப்பெண்ணின் புகாரின்படி, அவர் 2018-ம் ஆண்டு, வேலைநிமித்தமாக நேபாளத்திலிருந்து இந்தியா வந்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, அவர் ஒரு பெண் நண்பருடன் லக்னோவின் பைசாபாத் சாலையில் உள்ள வாடகைக் குடியிருப்பில் தங்கியிருந்திருக்கிறார். அந்த நண்பர், அவரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரவீன் ராஜ்பால் யாதவிடம் காணொளி உரையாடுதளத்தில் அறிமுகம் செய்துள்ளார். லக்னோவைப் பூர்வீகமாகக்கொண்ட பிரவீன் ராஜ்பால் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி, அவர் தனது பெண் நண்பரிடம் ரூ.1.5 லட்சம் கொடுத்திருந்தார். அவர் அதைத் திருப்பிக் கேட்டபோது, ​​அந்த நண்பர் பணத்தைத் திருப்பித் தராமல் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பிரவீன் ராஜ்பாலிடம் இது குறித்துக் கூறியுள்ளார். பிரவீன் லக்னோவில் உள்ள ஒரு விடுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு அறையை முன்பதிவு செய்து அங்கு தங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் துபாயிலிருந்து லக்னோவுக்கு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் விடுதியில் சந்தித்துள்ளார். அங்கு அவர் அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சில ஆட்சேபணைக்குரிய புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துள்ளார். அவர் அப்பெண்ணை லக்னோவில் உள்ள ஒரு நண்பரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு மீண்டும் போதைப்பொருட்களைக் கொடுத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் என்றும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை அவரது  சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றியுள்ளார். மேலும், அவர் சொல்வதைக் கேட்காமல் காவலர்களை அணுகினால், அவற்றை வைரல் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

அந்தப் பெண் எப்படியோ லக்னோவிலிருந்து தப்பித்து செப்டம்பர் 30 அன்று நாக்பூரில் உள்ள ஒரு நேபாள நண்பரிடம் வந்துள்ளார். அவர்கள் நாக்பூரில் உள்ள கோரடி காவல் நிலையத்திற்குச் சென்று அந்தப் பெண் பிரவீன் மற்றும் லக்னோவைச் சேர்ந்த பெண் நண்பர் மீது புகார் அளித்துள்ளார்.

சனிக்கிழமை, புகாரின் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் காவலர்கள் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் குழு, வழக்கு ஆவணங்கள் மற்றும் நாக்பூர் டிசிபியின் கடிதத்துடன் லக்னோவில் உள்ள சின்ஹாட் காவலர்களைச் சந்தித்து வழக்கைப் பதிவு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு லக்னோவுக்குப் புறப்பட்டுள்ளார் என்றும் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஹத்ராஸில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பட்டியல் சாதியைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச  பாலியல் வன்கொடுமைகள் மீது கவனம் குவிந்து வருகிறது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்தச் செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்