Aran Sei

பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை – மகிழ்ச்சியுடன் வரவேற்ற பணியாளர்கள்

Image Credits: TNM

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பெண் பயணி குழந்தையைப் பிரசவித்துள்ளார். புதன்கிழமை மாலை, இரவு 7.40 மணியளவில், 6E 122 விமானத்தில் பிரசவ நாளுக்கு முன்கூட்டியே குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.

“6E 122 டெல்லி – பெங்களூரு செல்லும் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. 19:40 மணிக்கு விமானம் தரையிறங்கும். அனைத்து செயல்பாடுகளும் இயல்பாக உள்ளன. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். பயிற்சி குழு முதலுதவிக்கும் வாழ்த்துக்கள்,” என்று, புதன் அன்று, இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பெண் கர்ப்பமாகி இன்னும் 32 வாரங்கள் ஆகவில்லை, அதனால்தான் விமான நிறுவனம் அவரை பயணிக்க அனுமதித்தது. விமானத்தில் பறக்கும்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, ​விமானத்தில் இருந்த ஒரு மூத்த பெண் மருத்துவ நிபுணர் உடனடியாக அவருக்கு உதவியுள்ளார், என்று ‘தி நியூஸ் மினிட்’ இணையத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

விமான பணியாளர்கள் பிரசவத்துக்கு எவ்வாறு உதவினார்கள் என்று விமான பயணிகள் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளனர்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் குழந்தை மற்றும் தாய்க்கு விமான ஊழியர்கள் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சக்கர நாற்காலியில் அமர்த்தி அந்தத் தாயை அவசர ஊர்திக்கு கொண்டு செல்லும்போது, குழுவினர் ‘நம்ம பெங்களூருக்கு வரவேற்கிறோம்’ என்று பதாகைகளை பிடித்தும் கைகளை தட்டியும் அவர்களை வரவேற்கும் காட்சி பதிவாகி உள்ளது.

2009-ல், ஏர் ஏசியா விமானத்தில் இதே போன்று ஒரு மலேசியர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனை கொண்டாடும் வகையில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் வாழ்நாள் முழுக்க இலவச விமான பயணச்சீட்டை வழங்க முடிவெடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோசஸ் தேவநாயகம் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்