Aran Sei

ஹத்ராஸ் : ‘வேண்டியது நீதி; அவதூறுகள் இல்லை’ – பிரியங்கா காந்தி

Credits: The Qunit

த்ராஸ் வழக்கில் சட்டவிரோதமாக வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயதுப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில், பெண்ணின் குடும்பத்தினர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உத்தரப்பிரதேச மாநில நிர்வாகத்தால் வீட்டுக்குள் சிறைப்படுத்தப்பட்டு, வெளியில் எங்கும் போக முடியாமல் தடுக்கப்பட்டு வருகிறார்கள் என மனுவில் கூறியிருப்பதாக Bar and bench செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் படியா, பிரிதின்கர் திவாகர் ஆகியோர் கொண்ட அமர்வு, உச்சநீதி மன்றம் வழக்கைக் கையாண்டு வருவதால், இதில் உயர்நீதி மன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

 

செவ்வாய் அன்று ஹத்ராஸ் வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சாட்சிகளுக்கு எந்த வகையில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதையும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தீப் சிங் காவல்துறை கண்காணிப்பாளருக்கு விளக்கக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தப் பெண்ணுடன் நட்பு ரீதியில் பழகி வந்தார் எனவும், அது பிடிக்காமல் பெண்ணின் அம்மாவும் அண்ணனும் அவளை அடித்திருக்கிறார்கள் என்றும் அதில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ட்விட்டரில், “ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காகக் கதைகட்டி, அவளுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றத்துக்கு அவளையே பொறுப்பாக்குது அருவருக்கத்தக்கதும், பிற்போக்கானதும் ஆகும் ” என்று சாடியுள்ளார்.

 

 

”அந்தப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டியது நீதி, அவதூறுகள் இல்லை” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்