Aran Sei

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

Image Credits: Outlook India

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாஜகவை விமர்சித்ததுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கலந்துகொண்ட முதல் தசரா ஊர்வலத்தில் உரையாற்றியபோது, ​​சிவசேனாவின் இந்துத்துவக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியதற்காகப் பாஜகவை விமர்சித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் தனது தந்தை பாலாசாகேப் தாக்கரேயின் இந்துத்துவா “மணிகளையும் பாத்திரங்களையும் தட்டி ஒலி எழுப்புவது அல்ல” என்று கூறியுள்ளார். பாஜகவின் தலைமையாக இயங்கும் ஆர்எஸ்எஸிடம் இருந்து அது இந்துத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விநாயக் தாமோதர் (வீர்) சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து இந்துத்துவத்துக்கு எதிராக நடந்தது ஏன் என்று பாஜக தலைவர்கள் சிவ சேனாவை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்துள்ள சிவா சேனா, பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவை ஏன் சாவர்க்கருக்கு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ராம் கதம், “சிவ சேனாவின் தசரா கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சாவர்க்கர் நினைவிடத்திலிருந்து ‘இந்துத்துவா பற்றிய பாடம்’ எடுத்தார்,” என்று கூறியுள்ளார்.

“ஏன் அவர் வீர சாவர்க்கரைப் புகழ்ந்து பேசவில்லை என்பதுதான் கேள்வி. அநேகமாக, வீர சாவர்க்கருக்கு எதிராகப் பல அவதூறான கருத்துகளைப் பரப்பி வரும் தனது புதிய நண்பர்களைப் பார்த்து அவர் பயப்படுகிறார், ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிவ சேனா தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத், சாவர்க்கர் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய சஞ்சய் ரவுத் “சிவ சேனா ஒருபோதும் வீர சாவர்க்கர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. எப்போதெல்லாம் அவரை அவமதிக்கும் கருத்துக்கள் வெளியானதோ அப்போது எல்லாம் நாங்கள் அவருக்கு ஆதரவாக நின்றோம். எங்களுக்கு எப்போதும் அவருடன் ஒரு உணர்ச்சிபூர்வமான இணக்கம் உண்டு. எங்களை விமர்சிப்பவர்கள் ஏன் அவருக்குப் பாரத ரத்னா வழங்கவில்லை என்பதற்கு பதிலளிக்க வேண்டும். அவர்கள் இப்போது ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்