Aran Sei

மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி – சீதாராம் யெச்சூரி

credits : the newindian express

மேற்கு வங்கத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உட்பட மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ(எம்)) மாநிலக் குழுவின் முடிவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அக்கட்சியின் மத்திய கமிட்டி.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை வீழ்த்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் உட்பட மாநிலத்தில் இருக்கும் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் தேர்தல் உடன்படிக்கைக்கு வரும்”  என சிபிஐ(எம்) -ன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் மேற்கு வங்க மாநில சிபிஐ(எம்) காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்று எடுத்த முடிவை மத்திய கமிட்டி நிராகரித்தது.

“மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவினுடைய தேர்தல் உத்திகள் மத்திய கமிட்டியினுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கே எதிராக இருப்பதால் காங்கிரசுடன் கூட்டணியோ அல்லது தேர்தல் உடன்படிக்கையோ வைக்க இயலாது” என அப்போது மத்திய கமிட்டி கூறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளையும் இடது முன்னணி 32 தொகுதிகளையும் கைப்பற்றின.

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது சிபிஐ(எம்) மற்றும் இடது முன்னணி எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் உடன்படவில்லை.

2016 ஆம் ஆண்டு, மேற்கு வங்க சிபிஐ(எம்) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது என்று கேரளாவின் இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். ஒரு மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிரியாகத் தேர்தலில் போட்டியிடுவது மற்றொரு மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

ஆனால் இந்த முறை சிபிஐ(எம்) கேரள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் என அனைவரும் ஒருசேர காங்கிரசுடன் கூட்டணி சேர ஆதரவளித்துள்ளனர்.

“கேரளாவின் மக்கள் மிகவும் முதிர்ச்சியுள்ளவர்கள். 2004 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான முடிவை கட்சியின் மத்திய குழு அறிவித்தது. அந்த முடிவை கேரள மக்கள் ஏற்றுக்கொண்டு, கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். எனவே கேரள வாக்காளர்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.

இதே போன்ற கூட்டணியை அஸ்ஸாமிலும் அமைக்க உள்ளதாகக் கூறியுள்ளார் யெச்சூரி. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் களம் காண உள்ளதாகக் கூறிய அவர் கேரளாவில் தற்போது உள்ள இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் தேர்தலைச் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து மக்களின் வாழ்வைத் துன்பப்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே, அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணிகளின் அடிப்படை நோக்கம் எனக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்