அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) பாஜக கையில் எடுக்க உள்ளதாக ’தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுனில் தியோதர், துஷ்யந்த் கௌதம், வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி மற்றும் வினோத் தவ்தே ஆகிய ஐந்து தலைவர்களையும், மாநிலத்தின் ஐந்து வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி, தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாகப் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகாரில் தேர்தல் வெற்றி ஊர்வலம் – மசூதியைச் சூறையாடிய பாஜக ஆதரவாளர்கள்
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை, அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் மாநிலத்திற்கு வருவார்கள் என்று பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளதாக ’தி இந்து’ தெரிவித்துள்ளது.
இதனால் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சியின் தொண்டர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மன உறுதியையும் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நவம்பர் மாத தொடக்கத்தில் அமித்ஷாவின் மேற்கு வங்க வருகையும், அப்போது மாதுவா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டதையும் , பாஜகவின் பிரச்சாரத்திற்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்
பட்டியல் சாதியினர் என வகைப்படுத்தப்பட்ட, மாதுவா சமூகத்தினர் வங்க தேசத்தில் இருந்து, மேற்கு வங்கத்திற்கு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அகதிகள். இவர்களில் பலர் பிரிவினைக்குப் பின்னரும் வங்கதேசம் உருவான பின்னரும் மேற்கு வங்காளத்தில் குடியேறியவர்கள்.
இது மாநிலத்தில் இரண்டாவது பெரிய பட்டியல் இன சமுதாயமாகும். குடியுரிமையும் அதையொட்டி இப்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், அந்தச் சமுதாய மக்களிடையே ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள பங்கான் தொகுதியின் ஒரு பகுதியான தாகூர்நகரில் இருந்து தொடங்கினார்.
`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்
மாதுவா சமுதாயத்தின் பிரபல தலைவராக அறியப்படும் பினாபனி தேவி என்ற ‘போரோ மா’வை அவர் சந்தித்தார். மேலும் போரோ மாவின் பேரனான சாந்தனு தாக்கூருடன் தனது பிரச்சார மேடையைப் பகிர்ந்து கொண்டார். சாந்தனு தாக்கூர், அந்த சமூதாயத்தின் அடுத்த தலைவராகப் பார்க்கப்படுபவர் என்று ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல், மாதுவா சமுதாய மக்கள் பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறினார்கள் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போரோ மாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தேர்தலில் நிறுத்தியுள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அந்த குடும்பம் அதன் அரசியல் ஆதரவுகளால் பிளவுபட்டுள்ளதாக ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அதன் மக்கள் தொகையை 3 கோடி என்று அதன் சமுதாய தலைவர்கள் கூறினாலும், மாநில அமைச்சர், அந்த சமுதாயத்திற்கு 1.75 கோடி வாக்காளர்களே உள்ளனர் என்று கூறியுள்ளார். ஆனால் இவை இரண்டிற்கும் அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை என்று அந்த செய்தி தெரிவித்துள்ளது.
`பாஜக அரசின் தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கை’ – சிஐடியு கண்டனம்
மாதுவா மகாசங்கம் என்ற மத சீர்திருத்த இயக்கம், 1800 களின் நடுப்பகுதியில் கிழக்கு வங்கத்தில் ஹரிச்சந்த் தாக்கூர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1947 க்குப் பிறகு, ஹரிச்சந்தின் பேரன் பி ஆர் தாக்கூர், மேற்கு வங்கத்தின் தாகூர்நகரை அந்தச் சமுதாயத்தின் தலைமையிடமாக நிறுவினார்.
போரோ மாவும் ஹரிச்சந்த் தாக்கூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். இந்தக் குடும்பம் இன்னும் அந்த சமுதாயத்தில் செல்வாக்கைச் செலுத்தி வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.