மேற்கு வங்காளத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிர்சா முண்டாவின் சிலைக்குப் பதிலாக வேறு சிலைக்கு மாலை அணிவித்தது, அவரை அவமானப்படுத்தும் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 5 ம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, பாங்குரா மாவட்டத்தில், புரட்சியாளர் பிர்சா முண்டா என்று கூறி வேறு சிலைக்கு மாலை அணிவித்தார். இந்தச் சிலை ஒரு வேட்டைக்காரருடையது, ஆதிவாசி தலைவரின் சிலை அல்ல என்று அவரிடம் உள்ளூர் மக்கள் விளக்கினார்கள்.
இதைத் தொடர்ந்து, மாதுவா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அவர்களின் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 23), மேற்கு வங்க மாநிலம், பாங்குரா மாவட்டத்தில் உள்ள காட்னாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “அவர் (அமித்ஷா) என்ன செய்தார். ஒரு சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நீங்கள் அது பிர்சா முண்டா அல்ல என்று எங்களிடம் கூறினீர்கள். இது ஒரு பழங்குடி வேட்டைக்காரரின் சிலை. நான் வேட்டைக்காரர்களை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் (பாஜக) பொய் சொல்கிறீர்கள்? பிர்சா முண்டா என்று கூறி தவறான சிலைக்கு மாலை அணிவிப்பது ஏற்புடையதல்ல.” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக
மேலும், ரவீந்தரநாத் தாகூர் என்று கூறி, வேறு சிலைக்கு உங்களால் மாலை அணிவிக்க முடியுமா என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். “பிர்சா முண்டாவிற்கு மரியாதை செய்யும் விதமாக அரசு, அடுத்த ஆண்டிலிருந்து, அவரின் பிறந்த நாளை, அரசு விடுமுறையாகக் கடைப்பிடிக்கும்.” என்று அவர் அறிவித்துள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்
மாதுவா பழங்குடியினர் வீட்டில், அமித் ஷா மதிய உணவு சாப்பிட்டது ஓர் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
மேலும், “கேமராக்களுக்காக அவர்கள் பெண்களைக் காய்கறிகள் நறுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் (அமித் ஷா) அவற்றைச் சாப்பிடவேயில்லை. அவரிடம் பாஸ்மதி அரிசிதான் இருந்தது.” என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டியல் சாதியினர் என வகைப்படுத்தப்பட்ட, மாதுவா சமூகத்தினர் வங்க தேசத்தில் இருந்து, மேற்கு வங்கத்திற்கு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அகதிகள். இவர்களில் பலர் பிரிவினைக்குப் பின்னரும் வங்கதேசம் உருவான பின்னரும் மேற்கு வங்காளத்தில் குடியேறியவர்கள்.
இது மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய பட்டியல் இன சமுதாயமாகும். குடியுரிமையும் அதையொட்டி இப்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், அந்தச் சமுதாய மக்களிடையே ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.