Aran Sei

ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணுக்கு, அவரின் குடும்பத்தார் இறுதி `மரியாதை செய்யக்கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக உடலை தகனம் செய்தது; பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்கவிடாமல் தலைவர்களைத் தடுத்தது; அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது’ எனப் பல்வேறு இன்னல்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து, மேலும் ஒருபடி கீழே சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டுள்ளார் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பாளர் அமித் மால்வியா.

டிவிட்டர் பக்கத்தில் அமித் மால்வியா பதிவிட்டுள்ள வீடியோவில், வன்கொடுமைக்கு ஆளான பெண் தரையில் படுத்திருக்கிறார். அவர் மிகுந்த அதிர்ச்சியிலும் வலியிலும் இருப்பது தெரிகிறது.

தன் மீது செலுத்தப்பட்ட பலப்பிரயோகத்தைத் தடுத்ததால், அவர்கள் கழுத்தை நெரித்தார்கள் என்று அவர் மீண்டும், மீண்டும் கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்த வாக்குமூலத்தை அமித் மால்வியா தனக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுகின்றார். அதாவது, பாதிக்கப்பட்ட பெண் தன்னை கழுத்தை நெரித்தார்கள் என்று மட்டுமே கூறுகிறாள் என்றும், பாலியல் வன்கொடுமை குறித்து அவர் கூறவில்லை என்றும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவே கூறியுள்ளார். அதேபோல், முதல் தகவல் அறிக்கையிலும் கும்பல் பாலியல் வன்கொடுமையைக் குறிக்கும் சட்டப் பிரிவுகளே சேர்க்கப்பட்டுள்ளன.

அலிகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்ணின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.

ஆனால், அமித் மால்வியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மகளிர் அணி பொறுப்பாளர் பிரீத்தி காந்தி, “அமித் மால்வியா எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளார்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எந்த அறிக்கையும் கூறவில்லை. அது ஊடகங்களின் கற்பனையான புனைவுக் கதை. நாம் சட்டத்தால் ஆளப்படுகிறோமா அல்லது சிலரின் கற்பனாவாதத்தால் ஆளப்படுகிறோமா?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், தேசியப் பெண்கள் ஆணையமும், அமித் மாவியாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, பாலியல் வன்கொடுமை நடந்தது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அமித் மால்வியா செய்ததைத் தவறாகக் கருத முடியும் என்று கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது உறுதியானால், தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.

பிரீத்தி காந்தி மற்றும் ரேகா ஷர்மா முன்வைக்கும் வாதங்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைத் தவறாக விளக்கும் வகையில் அமைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலே, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். இருந்தபோதும் அமித் மால்வியா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த வீடியோவைப் பதிவிட்ட பிறகு, பல்வேறு தரப்பினரும் அதுகுறித்து கேள்வி எழுப்பிய பிறகும்கூட இதுவரை அமித் மால்வியா அந்த வீடியோவை டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கவில்லை.

(scorll.in இணையதளத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் எழுத்தப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்