கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளன. இம்முடிவை விமர்சித்துள்ள பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டுமா அல்லது தேர்தலில் நம் பலத்தை காட்டுவதற்கு முன்னுரிமை வேண்டுமா என தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“பகலில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்திவிட்டு, இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது புத்திசாலித்தனமல்ல” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“உத்தரபிரதேசத்தின் பெரியளவில் இல்லாத சுகாதார உள்கட்டமைப்பை மனதில் வைத்துக்கொண்டு, கொரோனா தொற்றின் ஆபத்தான உருமாற்றமான ஒமிக்ரானை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதா அல்லது தேர்தலில் நம் பலத்தை காட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பதா என நேர்மையாக தீர்மானியுங்கள்” என்று வருண் காந்தி உத்தரபிரதேச பாஜக அரசை கோரியுள்ளார்.
இரவு நேரங்களில் சாலைகளை மக்கள் குறைவாகவே பயன்படுத்துவதாகவும், பெரும்பாலும் தொற்று பரவல் பகலில் நிகழ்கிறதெனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தொற்று பரவலுக்கு ஆதாரமாக இருக்கும் பொதுக்கூட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
2021 மார்ச் மாதம், மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பிய குறிப்பை மேற்கோள் காட்டியுள்ள வருண் காந்தி, “இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த அளவே பயன் தருகிறது என்று தெரிவித்துள்ளார். “ஆகவே, அரசு கடுமையானதும் பயந்தரும் வகையிலானதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. அடுத்தாண்டு, தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.