Aran Sei

‘மனித கௌரவத்தைச் சீர்குலைக்கும் செயல்’ – பெண்ட்யலா ஹேமலதா

Image Credits: Gauri Lankesh News

கவிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான மருத்துவர் வரவர ராவை உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி அவரது இணையர், பெண்ட்யலா ஹேமலதா உச்சநீதிமன்றத்தை நேற்று அணுகினார். விசாரிப்பதற்காக அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது கொடூரமானதும் மனிதாபிமானமற்றதும் ஆகும் என்று பெண்ட்யலா தெரிவித்துள்ளார். மேலும் இது மனித கௌரவத்தைச் சீர்குலைக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துளார்.

தனது இணையரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதற்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தையும் தேசியப் புலனாய்வு அமைப்பையும் (என்ஐஏ) பெண்ட்யலா ஹேமலதா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவருக்குப் பிணை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தைப் பெண்ட்யலா வலியுறுத்தி உள்ளார் என்று ‘லைவ் லா’ செய்தி குறிப்பிடுகிறது.

“எதிர்த் தரப்பினர் [மகாராஷ்டிரா அரசும் என்ஐஏவும்] சரியான நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சையை மறுத்ததால் வரவர ராவின் உடல்நிலை மோசமடைவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு… வரவர ராவுக்கு அளித்த சிகிச்சை கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சிகிச்சையாகும். இது சட்டத்தால் அனுமதிக்கப்படாத தண்டனை. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்று வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்டயலாவின் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ‘தி இந்து’வில் செய்தி வெளியாகியுள்ளது.

பெண்ட்யலா தனது இணையருக்கு முக்கியமான மருத்துவப் பராமரிப்பு தேவை என்று கூறியுள்ளார். அவர் காவலில் மிகவும் பலவீனமாகிவிட்டார். நரம்பியல் பிரச்சினைகளாலும் காவலில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றாலும் அவதிப்படுகிறார் என்றும் பெண்ட்யலா கூறியுள்ளார்.

“அவர் விசாரணைக்கு வரும் நிலையில் இல்லை. அவருக்கு முக்கியமான மருத்துவப் பராமரிப்பு தேவை… மனிதச் சகிப்புத்தன்மைக்கு அப்பால் அவரை சித்ரவதை செய்வதைத் தவிர, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கு எந்தப் பயனுள்ள நோக்கமும் இல்லை,” என்று அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

வரவர ராவ் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் விழுந்ததால் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

“எனவே கொரோனா தொற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் விழுந்ததும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. ஜூலை 30 அன்று நானாவதி மருத்துவமனை தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் இது பதிவாகியுள்ளது,” என்று பெண்ட்யலா சமர்ப்பித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 அன்று, மும்பை உயர்நீதிமன்றம், “வயது தொடர்பான காரணிகளையும் கொரோனா தோற்று பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, நோயாளிக்கு நெருக்கமான கண்காணிப்பு தேவைப்படும்” என்று கூறியதாக ‘தி இந்து‘ செய்தி குறிப்பிடுகிறது.

தலோஜா சிறையில் இருந்து அவரது மருத்துவ அறிக்கைகளைக் கோரும் மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

“நீதிமன்றம் மருத்துவ அடிப்படையில் அவரது பிணையைத் தீர்மானிப்பதைத் தவிர்ப்பதற்காக,” வரவர ராவ் ஜூன் 1-ம் தேதி மருத்துவமனையிலிருந்து அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை பெண்ட்யலா சுட்டிக் காட்டினார் என்று அச்செய்தி குறிப்பிடுகிறது.

“விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு, குற்றச்சாட்டுகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் அல்லது தேசிய விசாரணை சட்டத்தின் கீழ் மருத்துவ அடிப்படையில் பிணை வழங்க எந்தத் தடையும் இல்லை,” என்றும் பெண்ட்யலா நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்த தனது மனுவில் கூறியுள்ளார்.

81 வயதான வரவர ராவ், எல்கர் பரிஷத் வழக்கில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய விசாரணைச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் சமூகச் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்